பிரஹலாதன் சிறுபாலகனென்றாலும் நின்
திருவடி பணிந்துவிட்டதால்
ஓடி நீயும் ஒளிந்துகொண்டாய் அவனை காத்திடவே
தேடி தேடி சிறு துரும்பு முதல் தூண்வரையிலும்! கோதை
சூடிய மலர்களை வாங்கி
சூடிக்கொண்டு மகிழ்ந்தாய்!
நின்னடியார்களுக்கு என்றும் நீ அடிமையோ அவர்கள்
சொன்னவண்ணம் செய்யும் திருமாலே?
நின்மேனி பச்சைமாமலையென்றார்
நீரேந்தும் மேகநிறமென்றார்!
உன்னடியார்களின் பாமாலைகள்
உன் திருவடியின் மகிமையை மனதில் பதிக்குதே!
மகிழ்ச்சியில் பொங்கும் கண்ணீர்
அடுப்பில் பொங்கும் பாலை மறைக்குதே!
ஊசலாடும் மனதுடன்
ஊணுடம்பு வளர்க்கிறேன்!
கடலிலே விழுந்திட்ட சிறு துரும்பானேன்
கடக்கின்றேன் நீ அளித்த வாழ்வதனை!
பேரலைகள் நீ ஏன் செய்கின்றாய் கண்ணா
சிறு துரும்பிடமுமா உன் குறும்பு?
அலையோசையோடே என் மனம் உன்
குழலோசையை நாடுதே!
அலையோயும் அச்சிறு கணத்திலே
அழைக்கின்றேன் நான் உன்னை!
கடமைகளால் என்னை கட்டிப்போட்டு இவ்வுலக
உடைமைகளில் என் மனதை நீ திசைதிருப்பினாலும்...
பாம்பணை போல நீ படுத்துறங்க முடியாவிட்டாலும்
ஆலிலை போல் அழகான ஓரிடம்
உனக்காக என்னுள்ளத்தில் என்றுமே
உள்ளது கண்ணா!