Thursday, March 9, 2017

தவறவிட்ட தருணங்கள்....


பாசத்தை கண்களில் தோய்த்து 
புன்னகைக்கையில்....
புதைந்துதான் போகிறேன் 
அவளன்பில் நான்!

வீட்டை நான் நெருங்கும் முன்னே 
வேகமாக ஓடிடும் என் மனம் அவளைத்தேடி!

பள்ளிப்படிப்பை முடிக்காதவன் நான் 
பாரதியாய் என்னை எண்ணி 

உவகை கொள்வேன் அவள் 
உச்சியை முகர்ந்து விட்டு!

வானிலை போல் இப்போதெல்லாம் 
வறட்டி எடுக்கிறாள் என் மகள் 

எரிச்சலும் கோபமும் 
எங்கிருந்து வந்ததோ?

பதின் பருவம் என் செல்வத்தை 
பாடாய்படுத்துவதை தடுக்க இயலாமல் 

மாற்றிக்கொள்கிறேன் என் முன்கோப குணத்தை 
மகளின் துன்பம் குறைக்க!

பெருமையும் கொள்கிறேன் நானொரு 
பொறுப்பான தந்தையென்று...ஆனால் 

மனைவியின் உடல்மாற்றங்களை உணராது அவள் 
மனதை நோகடித்த தருணங்களை எண்ணுகையில் 

வெட்கித்தலை குனிகிறேன் - நேற்றுவரை 
வேங்கையென்றிண்ணியிருந்ததற்காக!

No comments:

Post a Comment