Friday, December 30, 2016

தாய்மை

தாய்மையென்பது சேயுயிர்காக்க
தன்னுயிர் பணயம் வைக்கும் துணிவு!

தரணியிலே ஈடுண்டோ?
தன்னிகரில்லாத படைப்பு!

பொற்பாதங்கள் பணிந்து
சொற்பதங்களால் போற்றவிழைந்தால்...

கடலில் சிறுதுளியானதே முயற்சியும் தாயே
கண்ணீர் மட்டுமே மிச்சம் என்னிடம் உன் புகழ் உரைக்க!

Wednesday, December 28, 2016

ஏன் இந்த வேதனை?

சோதனைகள் தாண்டினால்தான்
சாதனைகள் பெருகுமே!

பட்டை தீட்டிய வைரம் மட்டுமே
பாரில் நன்மதிப்பு பெறுமே!

செதுக்கிய கற்கள் அழகு
சிலைகளாக மாறுமே!

ஒடுங்கி நின்றுவிட்டால்
ஊருலகம் பழிக்குமே!

எதிர் நீச்சல் போட்டுப்பழகிய பெண்ணே பின்
ஏன் இந்த வேதனை?

Tuesday, December 20, 2016

தோழமை!!


ஒரே தட்டில் சோறுண்டுவிட்டு
ஓரினமாகிவிடும் பண்பினாலும்...

பிறந்த தாய்மடி வேறானாலும்
சிறந்த வழித்துணையாகிவிடும் அன்பினாலும்...

குற்றம் குறைகளை சகிப்பதில்
சுற்றத்தையே விஞ்சத்  துடிக்கும் அரவணைப்பினாலும்...

தொய்வில்லா புகழ்தான் என்றும் தோழமைக்கும்
தெய்வப்புலவரவரே  போற்றிவிட்ட நல் நட்பென்பதனால்!

அஞ்சல் பெட்டி!

நித்தம் பல திசைகளிலிருந்து வரும்
முத்தங்கள் கலந்த
சந்தங்கள் சுமந்து புது
பந்தங்களை உருவாக்குவாய்!

பெற்றோரின் மன உணர்வுகளையும்
உற்றார் தம் கருத்துக்களையும்
பாகுபாடின்றி கலந்து உறவில்
ஈடுபாட்டினை வளர்ப்பாய்!

அழைப்பிதழ்கள் பெற்று
பிழையதனை மறந்து மீண்டும்
உறவுகள் இணைந்து
பிரிவுகள் மறைய உதவுவாய்!


அலுவலகத்தின் செய்திகளையும்
பயிலகத்தின் ஆணைகளுடன்
மறுப்பின்றிக் காத்து
பொறுப்புக்களை உரைத்திடுவாய்!

அறிவியல் ஆகாயத்தில் பறந்தாலும் உன்னால் மட்டுமே
அறிந்தோம் அன்பின் ஆழத்தை
மைவிழியாளின் கண்ணீராலான எழுத்துக்களிலும்
கை நடுங்கிய பாட்டியின் கடிதமதனிலும்!

வாழ்த்து அட்டைகள் பள்ளித்தோழிகளுக்கு
வழங்கிய வரலாற்றை
மீண்டும் நினைவுபடுத்திவிட்டாய் மனமும் அடம்பிடிக்கிறது
மீண்டுவர விரும்பாமல்!

Friday, December 16, 2016

செய்திகள்!


ஒவ்வொரு நொடியும் ஏந்துகின்றது உலகின்
ஓராயிரம் புதிய செய்திகளை!

தூக்கத்தினால் தொலைத்துவிட்ட பொன்னான நேரத்தை
ஏக்கத்தினால் எழுந்ததுமே ஈடுகட்ட..

சேதி சொல்ல ஒரு தோழியாய்
செயற்கைக்கோள் வந்தாலும்...

காலைக்கடன் முடிக்கும் வேளையிலும்
காகிதத்திலும் மலர்ந்திருக்கும்...

புதுச்செய்திகளையும் பாலகனும் படித்திடுவான்
புதிய உலகத்தை அறிந்துகொள்ளும் துடிப்பிருந்தால்!

Sunday, November 27, 2016

பிச்சைக்காரி!!

அழுக்கேறிய கிழிந்த ஆடைகளுடன்
ஆதரவு தேடி...

வயிற்று பசியுடன்
வாதம் செய்ய முடியாமல்...

பத்தும் பறந்து போக
பரிதாபம் வேண்டி கோயில் வாசலில்...

கரங்களை குவித்தும்
கழிவிரக்கம் ஏற்பட கெஞ்சியும்...

போராடும் வாழ்க்கை எனக்கு
பழகியிருந்தது பல வருடங்களாகவே...

ஆனால் ...

கைகளில் பையுடன் ஒரு விதவை
கிழவியும் இன்று போட்டியாக...

அமர்ந்துவிட்டாள் புதிதாக
அருகில் பிச்சையெடுக்க!!

ஆச்சர்யமளித்தது அவளின்
அழுக்கில்லா ஆடைகளைக்கண்டு!!

"பிச்சைக்கு புதுசா??!!"
புரியாமல் கிண்டலாய் நான் வினவ பதிலுக்கு...

நாற்பது வருடங்களுக்கு முன் இதே கோயில் வாசலில்
நாற்பத்தெட்டு நாட்கள் மலடி பட்டம் நீங்க

பிள்ளைவரம் வேண்டி
பிச்சை எடுத்த அனுபவமிருக்கிறதென்றாள்...

பொட்டிலறைந்தாற்போல்!!

எல்லை மீறிய எதிர்பார்ப்புகள்!!

நிறைவேறாத ஆசைகள்
நிறைந்திருந்த இள வயதில்...

திறமைகள் இருந்தும் வாய்ப்புகள் இன்றி
திணறிய வாழ்க்கையில்..

எதிர்பார்ப்புகள் என்னுள்
ஏற்படுத்திய  இலக்குகள்...

வைராக்கியம் கொடுக்க
வித்தைகள் பல பயின்று....

வாழ்வின் புது அத்தியாயங்களை
வசந்தமாய் மாற்றி...

சொகுசுகாரில் தினம் கல்லூரி
செல்லும் என் வாரிசுகளால்...

எட்டிவிட்ட இலக்கை
எண்ணி பூரிப்படைந்துகொண்டிருக்கும் வேளையிலே...

ஏணிகளாய் என்னை உயர்த்திகொண்டிருந்துவிட்டு
எட்டவே இயலாத இலக்குகளாய்  இன்று  உருமாறி

நிதர்சனத்தின் முன் இன்று
நிராயுதமாய் நிற்க வைக்கின்றது...

என்னால் நிராகரிக்கப்படுகின்ற....
என் வாரிசுகளுடைய
எல்லை மீறிய  எதிர்பார்ப்புகள்!!

Wednesday, November 23, 2016

எங்கிருந்து கற்றாயோ??


ரோஜாவின் வாசம் மனதை
ரம்யமாக ஈர்க்கும்!!

வண்ணங்கள் தீட்டிய இறைவனை எண்ணி
வியக்க வைக்கும் மலர்!!

அன்பை வெளிப்படுத்த
அழகு ரோஜா ஒன்றே போதும்!!

மலர்த்தோட்டத்தையே தன்
மணத்தால் நிரப்பும் வாசமலர்!!

ரோஜாவே....

முட்செடியில்  நீ வசித்தாலும்
முகம் மலர்ந்து  வாசம் வீசுகிறாய்...

உயரிய இப்பண்பை
எங்கிருந்து நீ கற்றாயோ??

ஒருவேளை...

மண்ணில் பிறக்கும்போதே
முகச்சுளிப்புக்களை மட்டுமே
முதல் பரிசுகளாய் பெற்றாலும்!!

கடந்து வரும் பாதைகள்
கடினமாயிருந்தாலும்...

நம்பிக்கையொளியை உலகிற்கு தர
நல்நங்கையர் தம் வலிகளை மறைத்து...

புன்னகையோடு
புவியையே வெல்வார்களே அவர்களிடமிருந்தா??

Saturday, November 19, 2016

நான் இன்று அவனானேன்!!

தலைமை அதிகாரியான என்  மகன்
திடுதிப்பென்று வந்தான் தாயகத்திற்கு.
தில்லானா ஆடியது என் நெஞ்சம் சந்தோஷத்தில்!!

தாய் பரிமாறிய உணவுகளை
தன்னிறைவோடு ரசித்து உண்டு...

பார்வையில் ஈரத்துடனும் அளவுகடந்த
பாசத்துடனும் 'அப்பா நலமா ?' என்றான்
படுத்திருந்த  என் தலையை கோதியவாரே !!

புயலென நகர்ந்துவிட்டான் அலுவலக அழைப்பினால்
புரியாமல் விழித்து நின்றேன் !!

பல வருடம் பின்னே
பயணித்தது மனமும்..

அவன் 'அப்பா' என்று எனக்காக அழுததும்
அலுவல் நிமித்தம் அலைச்சலால்

புன்னகையுடன் அவனை முத்தமிட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு
பரபரப்பாக நான் பிரிந்து சென்றதும்...

மகனுக்கு வாழ்க்கையில் முன்னேற
முன்னுதாரணம் கொடுக்க நினைத்ததும்...

இன்று என்னால் நன்றாக
உணர முடிகிறது...

உழைப்பின் மேல் நான் என் மகனுக்கு
உருவாக்கியிருந்த ஈடில்லா நாட்டத்தையும்...  கூடவே

பிரிவு பொறுக்க முடியாமல்
பாசத்தில் அவன் சிந்தியிருந்த  கண்ணீரின் வலியையும்...

Thursday, November 3, 2016

ஏனிந்த தாமதம்??

அதிகாலை பொழுது
என்றும் போல் புலர்ந்தது!

குளுகுளு அறையின்
குளிர்ச்சி தூங்கேன் என்றது ஏக்கத்தோடு!

மூடிய சன்னல்களையும்
மீறி வந்தது பறவைகளின் பள்ளியெழுச்சி!

உதடுகளில் புன்னகை
ஓடி வந்து ஒட்டிக்கொள்ள...

தூக்கியெறிந்தேன் போர்வையுடன்
தூக்கத்தையும் சேர்த்து!

ஆனால்.,..

உழைத்து தேய்ந்த கால்கள்
ஊன்றமுடியாமல் வலித்தன!

தாயின் கருவறையில் உதைக்க ஆரம்பித்து
தள்ளாடும் வயது  வரை உழைப்பதாலோ??!!

பாதத்தில் துவங்கி முட்டி வரை
போக்குக்காட்டிய வலியை...

பொறுமையாக குறைத்தேன்
பயிற்சிகள் பல செய்து!

தவறி விழுந்த வலியால் பிள்ளை பருவத்தில்
தத்தாமல் நடக்க கற்றேன்!

ஆசிரியரின் பிரம்படி வலிக்கு
அஞ்சியதால் பட்டம் பெற்றேன்!

தண்டனைகளின்  வலிக்கு பயந்து
தவறுகளை களைந்தேன்!

வலிகள்தான் வருமுன் காத்து
வழிகாட்டும் நல் நண்பனென்றல்லவா நினைத்திருந்தேன்??!!

வேகமான வாழ்க்கை சூழலில்
வெற்றி பெற நேரம் காலம் பாராமல் ஓடியதால்...

அலட்சியமாக இழந்து விட்ட
ஈடில்லா உடல் நலத்தை...

இம்முறை இவ்வலியும் மிக தாமதமாக
இடித்துரைப்பதேனோ??!!

Wednesday, October 26, 2016

வள்ளல் பிறந்தான்!!


புன்னகை பூக்கும் பிள்ளைச்செல்வமே...
பல்லில்லா ஈறுகள் தெரிய...

சின்னஞ்சிறு சிவந்த நாக்கு
சிரிப்பில் மேலண்ணத்தில் ஒட்ட...

கண்களை அகல விரித்து
காட்டிக்கொடுக்கிறாய் உன் கள்ளமனதை!!

மயிலிறகால் தீண்டுவதுபோல்
மயக்க வைக்கும் ஒரு பார்வை!!

மெத்தென்ற பூப்பாதங்கள்
மெல்ல தத்தி நடந்து வர...

பஞ்சு போன்ற கன்னங்களில் என் உதடுகளை
பதிக்க சொல்லி தூண்டில் போட்டு....

பூப்போல அள்ளி உன்னை
பாசத்துடன் கொஞ்ச வைத்து...

கோடி இன்பம் தருகிறாய் வள்ளல்போல்
ஈடேதும் கேட்காமலேயே!

தந்தையென்னை முத்தமிட்டு
திக்குமுக்காடவைக்கிறாய்!!

ஆனந்தம் பொங்கும் மனத்துடன்
அன்பை அனைவருக்கும் பரப்புகின்றாய்!!

பாகுபாடின்றி இவ்வுலகில்
பழகி களித்தாடிடவே...

அறியாமையை அமிழ்தம் போல்
அருந்திவிட்டு வந்தாயோ??!!

தாயே பென்சைதென்!!


கடல் தாண்டி வந்தும்
கைபிடித்து என்னை காத்தாய் !!

ஊர் மாறினாலும் உணர வைத்தாய்
உன் பெயர் பென்சைதென் என்று!!

 என்...

தூக்கத்திலும் இன்பமாய் நீ
தரவிழையும் தெய்வதரிசனம்...

உன் மீது நான் கொண்ட
உண்மையான பக்தியாலோ??!!

ஏனோ நிஜத்தில் கண்கள் கலங்கி
உன்னை காண மனம் ஏங்குதே!!

எழுத்தில் வடிக்க உன்
எழில் உருவம் தோன்றுமோ??!!


இதயத்தில் உன்னை வைத்தேன்
இனி எவருக்கும் இல்லை இடம்  என்று!! நின்

அழகு பாதங்கள் விட்டு
அகல கூடாதென இதயம் துடித்தாலும்!!


அடம்பிடிக்கும் என்விதியோ
இடமாற்றம் செய்கிறது என்னை!!

தாய்ப்பசுவை இழந்துவிட்ட கன்று போல்
தங்ககூண்டிலுள்ள கிளியானேன்!!


மயக்கும் அழகில் மாதங்கி தாயாய்
மீண்டும் உன்னை கண்டேன்!

உற்சாகத்துடன் உன்னை காண ஓடினேன்
ஒரு பிடி சோற்றை கண்டுவிட்ட வறியவன் போல்!!

குளிர்ந்தது அகமும் கண்டுவிட்டேன்
கண்போல என்னை காப்பவளை!!

பிறவிப்பயன் பெற்றுவிட்டேன்
பிறகென்ன எனக்கினி விதியோடு ஒரு பேச்சு!!

Tuesday, October 25, 2016

கண்களே கண்களே!!

சிவந்த கண்கள்
சிறப்பாய் உரைக்கும்
உள்மனதின்
உஷ்ணத்தை!

திசை தெரியாமல் அலைந்து
திரியும் கண்மணிகள்
குழம்பும் சிந்தையை
கண்ணாடி போல் காட்டுமே!

குதூகலமான மனதை
குளிர்ந்த பார்வைகள்
உணர்த்துமே குறையின்றி
உலகிற்கு!

கலங்கிய கண்கள்
வெளிப்படுத்துமே
இதயத்தின்
எழுச்சியான உணர்ச்சிகளை!

தீர்க்கமான பார்வைகள்
தீர்மானித்த முடிவுகளை
திண்ணமாக உரைக்குமே
தடையின்றி!

பார்வையிலேயே
படித்துவிடலாம் உலகின்
பொக்கிஷங்களை
புறக்கண்களால்!

உள்நோக்கி திருப்பினால்
அறியலாம் தன் பிறப்பின்
அர்த்தங்களை
அகக்கண்களினால்!

ஐம்புலன்களிலேயே
அதிசயமாக
கண்களுக்கு மட்டும்
எத்தனை பக்கங்கள்!!

Friday, October 21, 2016

கிரி வலம் வந்தேன்!!


இரண்டாவது தலைமுறை நான்
எடுத்த பின் எழுந்த 

அடங்க வொண்ணா 
ஆவலாய் தந்தை வாய் திறந்தார்...

கடல் தாண்டி வந்தாலும்
கடந்த காலம் கண்களை கலக்குதென்றார்...

எங்களுக்காக உழைத்து தேய்ந்த அப்பாவின் 
ஏக்கத்தை ஆணையாக ஏற்றேன்...

தான் பெற்ற வெற்றிக்கு வித்து 
தாயகத்தில் உள்ளதென்றார் குல தெய்வமாக ஒரு மலையில்...

பறந்தோம்... தெய்வ தரிசனம் பெறவும்... 
பெற்றோரை மகிழ்விக்கவும்....

தங்குமிடம் தரமிருக்குமோ? நல்ல 
தண்ணீர் பருக கிடைக்குமோ? என்ற குழப்பங்களுடன்...

ஆனால்... என்ன ஆச்சர்யம்??

நாற்பது வருடங்களில் 
நகரமாய் மாறியிருந்தது சிற்றூர்...

விலையுயர்ந்த கற்களால் பதிக்கப்பட்டு 
விண்ணுலகம் போன்ற தங்குமிடம்...

தங்கும் அறையில் கூட
தெய்வீகம் கமழ்ந்தது!

பக்தி பரவசமாய் பிரமிப்போடு 
பல முறை சுற்றிவந்தேன் தங்குமிடத்தை...

கிரி வலம் செய்து 
குலதெய்வ வழிபாடு நடத்த 
குதூகலமாய் கிளம்பினால்...

அட அதிசயமே!!
எங்கு தேடியும் இல்லை மலை...

மனது ஆறாமல் 
மற்றவரிடம் விசாரித்ததில் புரிந்தது 

மலைக்க வைக்கும் மாற்றத்தை  சிற்றூருக்கு 
மலை தான் தன்னை தாரை வார்த்து தந்தது என்று...

Thursday, October 20, 2016

சக்தியா? சிவமா?

பட்டிமன்ற தலைப்பல்ல!
பாட்டி சொன்ன கருத்தல்ல!

விளையாட்டில் வெற்றி!
விண்ணைத் தொடுவதிலும் வெற்றி!

பெண்மை சாதிக்க துடிக்குது!
உண்மை உணர்த்த பார்க்குது!

ஆளும் திறனை வளர்க்குது!
ஆகாயத்தை வளைக்க நினைக்குது!

ஆணென்ன சளைத்ததா?
ஆண்மை விட்டுக் கொடுக்குமா?

ஆணும் ஜெயிக்கிறான்!
ஆளப் பிரயத்தனப் படுகிறான்!

சக்தியா? சிவமா?

ஆற்றல் மிக்க ஆண் பாயும் உயரம் மிக அதிகம்
ஆயிரம் பதக்கங்கள் பெறுவான்!

ஆனால் பாய வைத்தது பெண்மை தானே??

பெண் ஆணின் எதிரி அல்ல
பெண் ஆணுக்கு முன்னோடி!!

பெண்ணே நீ வெல்க! ஆணுக்காக...

உலகின் பார்வையை மாற்று பெண்ணே
உன்னால் மட்டுமே முடியும்!!

Thursday, October 13, 2016

வாசம்... இலவசம்!!

பாதையில் பயணிப்போரை
பரவசப்படுத்தி தன் வசப்படுத்துகிறது
மலர்களின்  வாசம்!

உரிமையாய் தென்றலும் வாசத்தை வாரிப்பூசி
உரைத்தது தான் பூங்காற்றென்று!

வண்டுகள் ரீங்காரம் செய்து உறுதிபடுத்தின
வளமான தன் வாழ்க்கையை!

வாசத்தை விலைபேசி
வாங்கிவிட விரும்பினர் பலர்!

தோட்டமிட்டவனின் திறமைகளை
நோட்டமிட்டனர் மனதில் வியந்தவாறே!

ஆளுக்கொரு செடி வாங்க எண்ணி
அனைத்து மலர்களுமே அழகாய்  தோன்றி...

ஆசையை பெருக்கிட அலைந்தனர்
அங்குமிங்கும் குழப்பத்தோடு!

ஓரிரு செடிகள் வாங்கி
ஒய்யாரமாக சென்றனர் ஏக்கத்தை மறைத்து!

தோட்ட சொந்தக்காரனுக்கு கூட
தொலைவில் தான் மச்சுவீடு!

ஆனால்....

பணத்திற்க்காகத்தான் என்றாலும் நீரூற்றி
பராமரிப்பவனுக்கு மட்டுமே...

தோட்டப்பூக்களின் மொத்தவாசமும் என்றும்  இலவசம்!!

Wednesday, October 12, 2016

ஆயுதம் செய்தோம்...


சுள்ளென்று சூரியன் சுட்டு விட்டதால்
சிவந்து விட்ட வானம்
நிலவு வந்து நின்றதும்
நீலமானது மீண்டும் குளிர்ந்து!

தணிந்த வானத்தை
தாலாட்ட வந்தன
குளிர் மேகங்கள்
கூட்டம் கூட்டமாக!

சத்தமில்லா பகுதியாக்க
சாத்தியமே இல்லாமல்
விண்ணை கிழிப்பது போல்
விமானங்கள் வந்தன விரைவாக!

வெகுண்டெழுந்த மேகங்கள்
வெண்திரையிட்டு பாதையை மறைக்க
அலட்சியமாக கிழிக்கப்பட்டு
அறிவியலுக்கு பலியாகின!

நிலவும் பயந்து நின்றது
நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வருகைக்கு பிறகு!

காற்றும் கூட கலங்கியிருந்தது
காடுகளுக்கு நேர்ந்த கதியால்!

கடலும் கதறியது
பனி உருகிய பாரம் தாங்காமல்!

மிதமிஞ்சிய அறிவால்
மட்டில்லாமல் மகிழ்ந்தாலும்
பக்கவிளைவுகள் நமக்கு
புரியவைக்க போராடுவதை பார்த்தால்...

ஒரு வேளை நாம்....

நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு
அடிக்கிளையை அறுக்கிறோமோ??!!

அறிவியல் என்னும் ஆயுதத்தால்!!

Tuesday, October 11, 2016

மகத்தான படைப்பு!!

கிணற்றுத்  தவளையாய்
கிடைத்த இடத்தில சுற்றுகிறாய்!

ஓடி ஓடி உழைக்கிறாய்
ஒரு பொருளும் சேமிப்பதில்லை!

ஒரே வேலையை என்றுமே குறையாத
உற்சாகத்தோடு செய்கிறாய்!

உன்னுடன் போட்டி போட்டு
உலகமே ஜெயிக்க பார்க்கிறது!


காலங்கள்  மாறலாம்
உன் வடிவங்களும் மாறலாம்!

ஆனால்...

உன்னை மதிப்பவருக்கு  கிடைக்கும்  புகழ் மட்டும்
ஒருநாளும் குறைவதில்லை!

இந்த உலகிலே
அறிவாற்றலில் மிகச் சிறந்த
மனிதனின் பிரமிக்க வைக்கும்
மகத்தான படைப்பு!

நீ தான்...

காலம் காட்டும் கடிகாரமே!!


Sunday, October 9, 2016

இன்று வருகிறாள்!!

துன்பத்தினால் துவண்டு
தனிமை அரக்கனுக்கு நான்
பலியாகிவிடாமல்
பாதுகாத்தவள்!

வாழ்வில் மீண்டும் ஒரு
வசந்தத்தை கொண்டுவந்தவள்!

என் மேல் அவள் கொண்ட நம்பிக்கைகள்
எனக்கு புது பொறுப்புகள் ஆயின!

அவளுக்காகவே சுவாசித்து
ஆத்மார்த்தமாக வாழ்ந்தாலும்...

காலம் மிகவும் பொல்லாதது
கைவரிசையை காட்டிவிட்டது  அவள் மனதில்!

மனமுருகி அவள் கெஞ்ச
மறுக்கவே  முடியாமல்

கண்கள் கலங்குவதை காண இயலாமல்
காத தூரம் அனுப்பினேன் கைமாறாக
அவளும் வாழ்க்கையில் தன்னம்பிக்கை பெற!

இன்று அவள் வருகிறாள்...

ஆறு மாத பிரிவு
ஆறு யுகம் போல என்னை
அறுத்தெடுத்த அடையாளங்களை
அப்புறப்படுத்தினேன்!

இதோ வந்து விட்டாள்!

இளைத்து போயிருக்கிறாள்
இரு நீல விழிகளில் கண்ணீருடன்
"அப்பா" குரல் தழுதழுக்க கதறி
அவள் அழுவதை பார்க்க
இன்று மட்டும் ஏனோ பெற்ற மனதில்
ஆனந்தம் பொங்குதே!

Friday, October 7, 2016

புரியாத புதிர்!!

எதிர் காலம் குறித்த பயத்தை
இளமையில் உதிக்க வைத்து...

வாழ்வின் வெற்றிக்கு இடைவிடாது
உழைக்க வைத்து - பின் மூப்பில்...

கற்ற கல்வியும் நினைவில் தேய்ந்து
கால் பாகம் ஆகிப்போனாலும்...

தாயிடம் சேயாய் பலமுறை
தன்னை மறந்து கேட்ட ஒரே கதை போல்...

திரும்பிப் பார்க்கவைக்கும் வாழ்வின்
தித்திக்கும் தருணங்களை...

நினைக்க நினைக்க மீண்டும்
நிஜம் போல சிலிர்க்க வைக்கும் ஞாபகங்களை...

மூன்றாவது தலைமுறை எடுத்து விட்டாலும்
முழு மூச்சுடன்   அசை போடுகிறாயே!

இளமையில் முதிர்ச்சியை நோக்கியும் - முதுமையில்
இழந்து விட்ட காலத்தை
இடைவிடாது துரத்தியும்...

மீண்டும் என்னை சேயாக்க துடிக்கும்
மனமே...

 நீ எனக்கு ஒரு புரியாத புதிர் தான்!!

Thursday, October 6, 2016

அழகின் ரகசியம் இதுதானோ??!!


முழுமதியின் வசீகரத்தால்....

வானில்
விழாக்கோலம் பூண்டது!

நீலப்பட்டில் பதித்து வைத்த
நட்சத்திர வைரங்கள் ஜொலிக்க...
ஆடம்பர ஆடையணிந்து மகிழ்ந்தது
ஆகாயம்!

கடல் தன் அலைகளால்
கரகோஷம் எழுப்பி நிலவின் அழகை
வானுயர புகழ்ந்து கொண்டிருந்தது
ஓயாமல்!

பறவைகளும் விழாவில்
பங்கு கொள்ள முயன்று
பறந்து பார்த்தன உயரமாக....

ஆனால்....
கானல் நீர்
கண்ட மான் போல...
ஆகாயத்தை அடைய முடியாமல்
அந்தரத்தில் மிதந்தன ஏமாற்றத்தோடு!

கிணறு கூட 
கிடைத்ததே பெரும்பேறு என்று
நிலவை பிம்பமாக்கி பார்த்து மகிழ்ந்தது
நீருக்குள்!

சிறு குழந்தைகள்
சோற்று கவளங்களை
சட்டென  முழுங்கின
சந்திரனின் அழகில் மயங்கி!

முழு நிலவை தூது அனுப்பினர்
முகம் காண முடியாதவர்கள்!

இவ்வாறெல்லாம்...

அழகினால் உலகையே மயக்கும் வெண்ணிலவே....

உன் இயற்கையான அழகு குறையாமல் இருக்கத்தான்
உயிரினங்கள் வாழ
இடமளிக்க மறுத்து விட்டாயோ??!!

Wednesday, October 5, 2016

ஒத்தையடி பாதையிலே!

விடியற்காலை...

பசும்புல் தரையில்
கொட்டிக்கிடக்கும் அழகில்
காலாற நடை பயில வந்தேன்!

ஊரே ஊர்ந்து செல்லும்
ஒத்தையடி பாதையது!

பாதி தூரம் கடக்கும் முன்னே
பகலாகி போகிறது!

இடையிடையே நெருஞ்சி முள்ளால்
இன்னல்கள் வேறு...

பல மைல் நடந்தும்
பாதையின் முடிவு
பகல் கனவு!

பயணத்தை இடையில் விட வழியில்லை
புலி வால் பிடித்த கதையாய்...

தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு
துச்சமாய் தெரிந்த பாதை

நெருங்கி வருகையிலே
நீளுதே மிக அதிகமாய்!

பதறி எழுந்தேன்
படுக்கையை விட்டு
பயங்கர கனவால் அவதியுடன்!

ஒரு வேளை...
வாழ்க்கை கூட
முயற்சிகளால் பின்னப்பட்டு
முற்றிலும் உணரமுடியாத முடிவுகள் கொண்ட
ஒற்றையடி பாதை தானோ??!!

Tuesday, October 4, 2016

வலியது! வலியது!


சிசு பேசும் முதல் வார்த்தை
சிறப்பம்சம் பெறுகிறது!

தாயின் மடி மீது
தவழ்ந்து கேட்ட கதைகளே நன்னெறிகள்!

ஆணையிட்ட தந்தையின்
அற்புதமான சொற்கள் மந்திரங்களாகின்றன!

ஆசிரியரின் வாய் மொழியில்
அமுத உரைகள்
ஏற்றமிகு
எதிர்காலத்துக்கு சாசனங்கள்!

மனைவியின் வார்த்தைகள்
மந்திரியின் மதியூகமாகும்!

ஏழையின் சொல் கூட
ஏறும் அனைவர் மனதிலும்
உயிர் பிரியுமுன் அவன்
உரைக்கும் கடைசி வார்த்தைகள்!

வார்த்தைகள் ஆயுதங்களை விட
வலிமையானவை!

மனிதனின் மனதை ஆட்டி படைக்கும்
மந்திரக்கோல் வார்த்தைகளே!

வயதான பின் வரும்
விவேகம்...
மௌனம் பழக
மெனக்கிடவைக்கும்!

ஒரு வேளை...
அதனால் தான்....

கடினமான பற்கள்...
கடக்க கூடாத
கதவுகளாய் உதடுகள் என
வார்த்தைகளை
உற்பத்தி செய்யும்
நாவிற்கு மட்டும்
கடுங்காவலோ??!!

Monday, October 3, 2016

ஓர் இரவு!!

அழகான உலகம்
அனைவரும் சமம் என்று
அமைதியாய் இயங்கி கொண்டிருக்க...

எல்லையில்லா
எதிர்பார்ப்புகள்
ஏக்க பெருமூச்சுகள் -  அனைவரிடமும்

பாம்பின் விஷமாய்
பரவ பொறாமை தீ
பொங்கி வழிந்த நேரம்...

வந்தது ஓர் இரவு...

ஆக்ரோஷமாக வானிலிருந்து
ஆர்ப்பரித்து தாக்குது
அடைமழை!

காற்றும் தன் பங்கை
கச்சிதமாக்க
சுழன்று அடித்தது
சூறாவளியாய்!

தங்கியிருக்கும் மரங்களில் சிறகுகள் நனைய
தன்னுயிர் மறந்து - பதறும்
தன் குஞ்சுகளை அரவணைத்து நம்பிக்கையூட்ட

முயற்சிக்கின்றன வானிலை
முன்னறிவிப்பை முற்றிலும் உணராத பறவைகள்!

கும்மிருட்டில் மிரண்டு
கிடைத்த இடத்தில சுருண்டிருந்தன தெரு நாய்கள்!

வேகமாக அடிக்கும் காற்று
வெகுவாக நம்பிக்கையின்மையை
விதைக்கின்றது அனைவரின் மனதிலும்!

போர்க்கால அடிப்படையில்
பரபரப்பாக தயாராகும் ராணுவ உதவிகள்...

தளராத மனதையும்
தளரவைத்து - வரப்போகும்

பேராபத்தை
புரியவைத்தது

மரண பயம்
மனதை உலுக்க

இரவின்  ஒவ்வொரு நொடியும்
கலவரத்துடன் கரைந்தது

விடிந்ததும் திடுமென புயலடங்கி
உதித்தது பிரகாசமான சூரியன்!

அனைவரும் உணர்ந்தனர்
உலகில் மதிப்பு மிக்கது - தன்
உயிர் மட்டுமே!!

Thursday, September 29, 2016

எனக்கு கிடைத்த புதையலே!!

பற்கள்
பளிச்சிட....

கருமையான கண்களும்
கலந்து சிரித்துப்   போட்டியிட.....

வில்போன்ற புருவம்
வீம்பு கொண்டு வானவில்லாய் மெருகேற்ற....

கன்னம் சிவந்து
கிண்ணத்துசாந்தாகிஇருந்தது!

எடுப்பான நாசி
துடிப்புடன் நிற்க...

இதழ்கள் இணைபிறிந்த சிரிப்பில்  சிவப்பு ரோஜா
இதழ்களாய் குளிரவைக்க....

முகவாய் பளபளப்பில்
முழுமதியே போல் தோன்ற...

அயர்ந்துபோனேன்
அத்தனை அழகுககளுக்கும்
ஆதாரத்தை அறிந்துவிட்டதால்....

"ஆஹா... எவ்வளவு அழகு  ??"
ஆன்லைனில் ஆர்வத்துடன்  சொன்ன அம்மாவிற்கு 
அளவாய் தலையசைத்து  ஆமோதித்தேன் பிரமையில்!

அம்மாவின் புன்னைகையில்
என்மேல் கொண்டிருக்கும் நம்பிக்கை மிளிர்ந்தது!

தங்கையும் சொன்னாள்
தாங்கவொண்ணா சந்தோஷத்தில்
"ஆல்  தி பெஸ்ட் அண்ணா"

புதையலாய் எனக்கு கிடைத்த
பொக்கிஷம்...

கண்களில்
கர்வம் பொங்குகிறது!

கனவிலும்
காணக்கிடைக்காத  அழகு...

 இதோ இன்று
என் கைகளில்...

என்  ஆராய்ச்சி கல்வியின் ஒளிமயமான
எதிர்காலமாக
எனக்கு கிடைத்திருக்கும்...

உலகையே ஆட்டிப்படைக்கப்போகும்
உன்னத அழகுள்ள
பழங்கால பெண்ணின் சிலை! 

Wednesday, September 28, 2016

ருசிகண்ட பூனையானேன்!

சித்திரை மாதம்
கத்திரி வெய்யில்... 

தலையை ஊடுருவி 
தயவின்றி தகித்தது! 

புற்களும் வெப்பத்தால் 
பொசுங்கின பூமியில்! 

தள்ளாத வயதாகிவிட்டாலும் 
தலைப்பாகை கட்டி....

கண்களில் கருப்புக் கண்ணாடியுடன் 
கைகளால் தள்ளுவண்டியில்..... 

இழுத்து வந்தேன் ஜில்ஜில் ஐஸ்க்ரீமை 
கழுத்தில் வழியும் வியர்வையுடன்!

முதுகு முழுதும் ஈரமாகி வழிய.... 
முகத்தை துடைத்து கைத்துணியும் ஈரமாகியது! 

பகல் வெயிலை சிறிதும் சட்டை செய்யாத 
பிள்ளைகள் ஓடி வந்தனர்!

"ஐஸ்க்ரீம் தாத்தா!" என கத்தியவாறே 
ஐந்து ரூபாய் தாள்களுடன்! 

வெயிலிலும் குளிரடித்தது மனதில் 
வெட்ட  வெளி  மலர் தோட்டம் போலானது! 

மகிழ்ச்சியில் பிள்ளைகள் ஓட 
மலர்ந்தது சுய சம்பாத்தியத்தால் என் 
மனதும்! 

சில்லறைகள் 
சுமப்பது  மிகவும் 
சுகமானது!

'வீட்டில் ஓய்வு எடுங்களேன் அப்பா'
மகனின் வார்த்தைகள் மனதை வருடினாலும்.... 

பாலின் ருசிகண்டுவிட்ட பூனைபோல்!
பிறர் மதிப்பில் உயர்ந்து 
போற்றப்பட உதவும்
உழைப்பின் ருசியை 
உணர்ந்துவிட்டபின்...  

வயோதிகத்தில் 
உண்ணும் மருந்துகளைவிட

ஓய்வு கசப்பதென்னவோ 
உண்மைதான்! 

முத்துப்போல் ஜொலித்து 
முதல் மரியாதையை பெற்று தருகின்றன 

உழைப்பவனின் 
வியர்வைத்துளிகள்- என என் சொந்த 

கருத்துக்களில் 
செருக்கேற நடந்தேன்....

ஒருவேளை .........

அடாது ஆடும் கடலும் 
உவர்ப்பது .....
அயராது உழைக்கும் 
அலைகளின் 
வியர்வையாலோ ??!!

என் மனமும் 
எடுத்து கொடுத்தது 
எழுச்சிமிகு எண்ணங்களை..... 

Friday, September 23, 2016

பரிமளித்திட வேண்டாமோ?


பகல் பொழுதில் வயல் வெளியில்
புல் மேய்ந்த கால்நடைகள் தந்தன
பூமிக்கு தன் சாணத்தை எருவாக
புதியதொரு செடி தோன்ற!

அழகான பூக்களும்
அக்கறையாய் தேன் சொரிந்து
உபசரித்தன மகரந்த சேர்க்கைக்கு
உதவிய வண்டுகளை!

பறவைகளும் பழங்களை உண்டு
பின் தன் எச்சத்தால்
அருகில் பரப்புகின்றது
அம்மரத்தின் விதைகளை!

சின்னஞ்சிறு மீன்களும்
சுத்தமாக்குகின்றன
தஞ்சமளித்த நீர் நிலைகளில்
தங்கும்  அழுக்குகளை தின்று!

இயற்கையாய் நிகழும்
இச்செயல்கள் இவ்வுயிரிகளின்
சிறந்த பண்புகளாய் எண்ணி, எண்ணி
சிலாகிக்க வைக்குதே!

பரிணாம வளர்ச்சியில்
பன்மடங்கு உயர்ந்துவிட்ட மனிதனின்
பண்புகளும் சேர்ந்து
பரிமளித்திட வேண்டாமோ??


Thursday, September 22, 2016

வரம் தருவாயா?

புத்தக குவியல்களில்
புதையலாய் கிடைத்த
புது கவிதையின் அழகு!

வீட்டின் வாயிலில்
வாழ்வின் வெற்றியை முன்னமே
கணிக்கும் கண்கவர் வண்ண
கோலங்களின் அழகு!

அலையென அசையும்
கருங்கூந்தலின் அழகு!

பரந்த வானத்தில்
பறவை போல்
பறக்கும் விமானத்தின் அழகு!

தேன் கூட்டை
தட்டி கலைத்தது போல்
பள்ளி முடிந்து
பரவசமாய் ஓடும் பிள்ளைகள் அழகு!

சீட்டுக்கட்டை
அடுக்கியது போல்
பேருந்தில் இடமின்றி
நெருக்கிய பயணத்திலும் அழகு!

அடடா...
வெட்டி எறிந்த
விரலின் நகம் கூட
மூன்றாம் பிறைபோல் அழகோ அழகு!

கம்பன் வீட்டு
கட்டுத்தறி போல் ஆனதை உணர்ந்தேன்  நான்!

 உன் கடைக்கண் பார்வை...
என் எண்ணங்களை
எழிலாக்கி...
என்னையும்
கவியாக்கி...
விந்தைகள் பல புரியும்
வித்தகியானது பெண்ணே!

வரம் தருவாயா??!!
என்றென்றும் சிறந்த கவியரசனாக நான் வாழ!

Wednesday, September 21, 2016

இயற்கையே, உனக்கு ஒரு கேள்வி...

மழைக்கால மேகங்கள்
மயங்கி திரியும் வானில்!

நட்சத்திரங்கள் மறைந்து நின்று
நகராத கருமேகங்களை முறைக்கும்!

அடாது கொட்டும் மழையில்
இடுப்பு வரை தண்ணீரில்...

மெல்ல நகரப்பார்க்கும்
மக்கள் கூட்டம்!

பேருந்தில் சென்றவர்கள்
படகில் வீடு திரும்புகின்றனர்!

இந்த வெள்ளத்திற்கு
என்ன சிக்னல் கொடுப்பது
என்று குழம்பி பழுதாகி
எல்லா திசையிலும்
பச்சை காட்டும்
போக்குவரத்து சிக்னல்!

தொலைபேசி ஆபத்திற்கு உதவாமல்
தொல்லைபேசியாகின்றது!

மின்சாரத்தை மட்டும்
மிகவும் நேசித்து விட்டதால்
சில மணி நேரமாவது  வெளிச்சம் கிடைக்க
சிம்னி விளக்கு கூட இல்லை!

கவிழ்ந்து இருக்கும் இருளில்
கள்வர்களின் நடமாட்டம்
உதவும் நெஞ்சங்களை கூட
உள் தாழ்ப்பாள் போட வைக்கும்!

தற்காலத்தை ஒரே பொழுதில்
கற்காலமாக புரட்டிப்போட்டு...

அனைத்துயிரையும்
ஆட்டி படைக்க வல்ல இயற்கையே!

உன்னை செயற்கை வெல்ல
அமைதியாக அனுமதிக்கிறாய்!

பின்னொருநாள் உரிமையோடு  நீயே
ஈடு செய்து கொள்கிறாய்!

இயற்கையே, உனக்கு ஒரு கேள்வி...

உனக்கு இழைக்கப்பட்ட பிழைகளை
எந்த கணினியில்
நீ பதிந்து வைக்கிறாய்?

Tuesday, September 20, 2016

கடலே உனக்கு பயமோ?

கடலே கடலே...
அழகிய அலையின் ஓசை...

அசையாமல் கட்டிப்போடும்
அலை பாயும் மனதை!!
இசையாக வருடும் இதயத்தை!!

தலை கேசத்தை
கலைத்து விளையாடும்
கடல் காற்று!!

குட்டை நீரில்
குதித்தாடும் குழவி போல்
மேலும் கீழும் அசைந்தாடும் அலையில்
மெல்ல நகரும் கப்பல்!!

கடல் நீரில்
கால் நனைக்கவும்
கலங்கும் அழகிய
குமரி போல்
கரையில் ஒதுங்கி நிற்கும் படகுகள்!!

தன்னுலகம் எனும் இறுமாப்பில்
துள்ளி திரியும் மீன்கள்!!


ஒப்பில்லாத உன் சக்தியை
உலகிற்கு உணர்த்த
உணர்ச்சிவசப்பட்டு
பேரலைகளால் எங்களை மிரட்டி
பரவசப்படுவதை  ஏன் நீ  நிறுத்துவதில்லை ??!!

ஒரு வேளை...

நீயும் நிலம் போல
காகித பத்திரமாகி
பத்திரமாக்கப்பட்டுவிடுவாய்
வங்கி பெட்டகத்தில் என்ற பயமோ??!!




Saturday, September 17, 2016

பொன் மானல்ல பொய் மான்!

பூங்காக்களின் அழகு இன்று...
புது அர்த்தம் பெறுகிறது!

கண்மூடி ரசிக்கிறேன்...
காட்சிப்பிழையோ??!!

இதமான காற்று...
அதனை தென்றல் என்பார்களே??!!

என் நாசிக்குள் நுழைந்து 
இதயம் வரை இனித்தது!

இத்தனை விதமான மலர்கள் 
இவ்வுலகில் இருக்கிறதா??!!

கடவுள் மிகுந்த கலைத்திறனை 
காட்டியுள்ளார் பூக்களில்!

மஞ்சள், ஊதா, கருநீலம் 
கணிக்கவே முடியாத கலவைகளில் பூக்கள்!

பொறாமை பொங்கியது மனதில்...
பூக்களுக்கு அழகிய  பல வண்ணங்களா??!!

என்மீது ஏதோ வந்து விழுந்தது 
"என்ன இது? பறவையின் எச்சமா?"
"என் பொறாமைக்கு கிடைத்த பரிசோ?" கண்திறந்து பார்த்தால்...

நெகிழிப்பை ஈரத்துடன் என் தோளில் 
நச்சென ஒட்டியிருந்தது!

எதிரில்...
உடைந்து போன
ஊஞ்சலில் அமர்ந்து, தண்ணீர் அருந்திவிட்டு...

வீசிய நெகிழிப்பை பற்றிய 
விவரமே அறியாமல் 
வாய்த்துடைத்துக் கொண்டிருந்தது ஒரு குழந்தை!

சுற்றிலும் ஒரு சிறு புல்
செடி கூட இல்லாத வறண்ட பூங்காவின்...

மண்ணின் புழுதியில் குழந்தைகள்  உற்சாகத்தில் 
மகிழ்ந்து திரிந்தனர்

பூந்தடாகத்திற்கு வந்த
பொன்மானை கண்டது போல்!

இக்குழந்தைகள்  உணரவில்லை அவர்களுக்காக 
இவ்வுலகில் நாம் விட்டு வைத்திருப்பது...

பொன் மானல்ல 
பொய் மானென்பதை!!

Friday, September 16, 2016

ஆமையும் முயலும்!

ஆடிப்பாடி வந்த ரயில்
ஆசுவாசப்படுத்தி நின்றது!

அமைதியாக ஆமை போல் உள்ளே சென்று
ஆரவாரக்கூட்டத்தில் ஐக்கியமானேன்!

பள்ளி மாணவர்களின் அரட்டை
பாதி வழி வரை கேட்டது!

பரிட்சை பற்றிய பயமேயின்றி
பகிர்ந்தனர் சந்தோஷங்களை!

விசிறி விற்கும் தாத்தா அனைவருக்கும்
விசிறினார் இலவசமாக!

ஜன்னலில் ஓடிக்கொண்டிருந்த மரங்கள்
ஜனங்களுக்கு வேடிக்கையாக இருந்தது!

பூக்கூடை அம்மாக்கள் ரயிலிலேயே
பூமாலைகளை தொடுத்து நறுமணம் பரப்பினர்!

'கூ' கூவிய ரயில் சத்தம்
குயிலின் குரலாய் ஒலித்தது!

மனமும் மெல்ல தளர்ந்தது
மானசீகமாய் தாளம் போட்டது!

திடுமென போனின் மணியோசை
அனைவரும் திரும்பி எனை பார்க்க - அலுவலக அழைப்பு!

'சாரி சார், கவனிக்கல இப்போ பாக்கறேன்'!
சடுதியில் உரைத்தேன் மன்னிப்பை!

மனமும் முயலென மாறி ஓடியதே
ரயிலின் அழகு மறைந்தும் போனதே!

எல்லா அமைதியும் பறந்தது
எனக்குள் அவசரம்  பிறந்தது!

அழைத்தேன் போனில் உதவிக்கு
அலுவலகத்தின் நண்பர்களை!

ஓரிருவர் உதவினரே  நிறைவாய்
ஒத்தாசை செய்தனரே!

நன்றி நவின்று மகிழ்ந்தேனே
நன்றாய் மீண்டும் அமைதி கொண்டேனே!

மனதில் அமைதி குடி கொள்ள
மீண்டும் ஆமை போல் ஆனேனே!

ரயிலின் அழகும் கூடியதாய்
ரகசியமாய் மனதும் சொன்னதே!

Wednesday, September 14, 2016

என் வீட்டு ரோஜா!

அழகான பூந்தொட்டியில் மண்நிரப்பி
அருமையான வாசம் வீசும்
ரோஜாவின்  விதையை விதைத்தேன்...

சூரியனின் ஒளிக்காக வெளியிலும்
அந்தி சாயும் நேரத்தில் வீட்டிற்குள்ளும்
மாறி மாறி வைத்து காத்தேன்

என்னுயிர் ரோஜா விதை
தன்னுயிர் பெறுவதை...

கண நேரமும் நகராமல்
கண் குளிர கண்டு மகிழ்ந்தேன்!

நன்கு பராமரித்து
நான் வளர்த்த ரோஜா செடியில்
நிறைய பூக்கள் பூத்து
நறுமணம் கமழ்ந்தது என் தோட்டம்!!

யாரும் பறித்து விடாமல்
என்றும் காவல் காத்திருந்தேன்!!

ஆனால்...
ஏனோ ரோஜா வாடியதே
ஒரு நாள் பூக்கள் உதிர்ந்தனவே!!

அடடா, அறிந்தேன் வாழ்க்கையதை!
பிறந்தோம் மண்ணில் நல்மானிடராய்
பிறப்பின் பயனை அடைந்தோமா??

ஒரு நாள் உதிர்வோம் ரோஜா போல்!!
அதற்கு முன் அன்பினால் மற்றவர் மனதை
ஆள்வோம் ராஜா போல்!!




Monday, September 12, 2016

எங்கே போகிறோம் நாம்??

குளிரிந்த காலைப்பொழுது உடலுக்கு குறையில்லாத  வலிமையை தரும்!

கண்களுக்கு இதமானது...
கோயிலில் இறைவனை தரிசிக்க புறப்பட உகந்த நேரம்!

பள்ளியில் நடத்தும் பாடங்களை
பசுமரத்தாணிபோல் பதித்துக்கொள்ள மிகவும் சரியான பொழுது!

எட்டு மணி நேர உறக்கத்திற்கு பின்னே
எட்டிப்பிடிக்கப் போகும் உயரத்திற்கு...

மனதளவில் திட்டம் தீட்ட
மகத்தான நேரம்!

படைப்பாளிகளின் இனிய பாமாலைகளை
பாங்காக அமைக்க அமைதியான நேரம்!

உலகின்...

மதிப்பில்லா பொன்னான நேரம் இதுதான் என்று
மட்டற்ற மகிழ்ச்சியில் - பறவைகள்

தன் மென்மை குரலெடுத்து வீதியெங்கும்
தண்டோரா போட்டுக்கொண்டிருப்பதை...

நின்று ரசிக்கக்கூட சிறிது
நேரமின்றி வேகமான உலக வாழ்க்கையில்
நாம் ஓடிக்கொண்டிருந்தாலும்!

அந்த ஜீவன்கள் என்றுமே பாடுவதை நிறுத்தி விடுவதில்லை!!

Sunday, September 11, 2016

ஆதலால் அன்பை விதைப்போம்!

நாற்பது வயதில்
ருத்ரதாண்டவமாடும் ஹார்மோன்கள்!

அதற்கு மேல்...

கண்களில் விழும் திரையால்
கண்ணாடியின் துணை கூடும்!

சர்க்கரையின் சகவாசம்
சாகாவரத்தையும் போக்கிவிடும்!

உப்போ உவர்ப்போ
உதவாது நாவிற்க்கு!

காது கானாம்ருதத்தையும்
கேட்க விடாது!

அல்செய்மர் வந்தால்
அழகிய பெயரையே மறக்கவைக்கும்!

நடந்தால் முட்டி வலிக்கும்
நடக்க இயலாமல் குட்டித்தீவாகும் வாழ்க்கை!

அப்போது...

அந்த தீவுக்குள்
அற்புதமான ஜீவன்கள்...

சேயாகி விட்ட நம்மை
தாய்ப்போல் அரவணைத்து
தயை கொண்டு காக்க வேண்டும்!

ஆதலால் அன்பை விதைப்போம் இன்றே!!


ஆனந்த வெள்ளமே!

தாயின் கருவறையில்
தனியாக தவித்து...

கவிந்த இருளில் 
கண்களிருந்தும்  காட்சிகளின்றி...

உடலை 'ங' ப்போல் 
வளைத்திருந்து

திரும்பக்கூட இடமின்றி 
குறுகியே அமர்ந்து

முன் ஜென்ம நினைவுகள் 
முள்ளாய்   குத்த 

வெளிவர முடியாத 
வேதனை வாழ்க்கை

போதுமிந்த தண்டனையென்று
பொறுமையிழந்து வெளியேற

வழி தேடியலைந்த காலங்களில்
விடுதலை நேரம் என் இருள்
வாழ்க்கையில் விளக்காய் வந்தது! 

ஆனால்... காட்சிப்பழகா கண்களினால்
இத்தனைக்காலம் தன்னுயிராய் எனைக்காத்து

வெளியுலகம் பழக இன்று
விடுவித்த தாயின் முகம் விளங்காது

கதறியழுதபடி கண்ணீருடன் கேட்டேனே  இனிய
குரலை மட்டும் 'கண்ணே கண்மணியே' என்று

ஆனந்த வெள்ளத்தில் மிதந்தேனே 
அம்மாவின் அழகு முகம் பழகுமுன்னே

உணர்ந்து விட்டேன் நான்  
உன்னதமான தாய் மொழியின் அழகை!


Friday, September 9, 2016

மேகமிட்ட சாபமோ?

சூரியனின் சூடான ஒளிக்கற்றைகள்
சிறிது நேரமாவது பூமியை
அணுகாமல் தன் குளிர் போர்வையால்
அணைத்தது மேகம்!

பூமியும் சற்று குளிர்ந்து நன்றி பாராட்டியது!

பாழாய் போன காற்றிற்கு என்ன பொறாமையோ??!!
பதட்டமாய் வந்து சிதறடித்தது மேகங்களை!

வழி தெரியாது இங்குமங்கும் அலைந்து...
வலிமையுடன் மோதிக்கொண்டன மேகங்கள்!

இடி இடித்து தன்  துயரை சொல்லி...
'ஹோ' வென்று கொட்டி அழுதது மழையாக!

உதவ முடியாத பூமியும்
வெட்கி குனிந்தது தலை!

அழகான மேகங்கள்!
அரை மணியில் கரைந்து....

பூமியிடமே தஞ்சம் அடைந்தன - சில நாட்களில்...
பூத்த பூக்களின் வாசமும்...
புதியதாய் உதித்த ஜீவராசிகளாலும்...

நன்றிக்கடன் உயர்ந்து
நெஞ்சம் பாரமானது பூமிக்கு...

சகல ஜீவராசிகளும்
சமமென்று  உணர்ந்து
சத்துப்பொருள்களை வாரி வழங்கியது - பூமியின்

உயரிய இந்த கோட்பாட்டை
உணராத ஆறறிவு மனிதன்...

தரணியில்...
தான் மட்டும் வாழ நினைத்ததால்
மேகமிட்ட சாபமோ??!!

ஓசோனில்  ஓட்டைகள்!!

Thursday, September 8, 2016

நிலவே, நீ என் செய்வாய்?

பொன் மாலை வேளையில்....
பூமியை குளிர வைக்க வந்த நிலவே!

திரைகடலோடி
திரவியம் தேட சென்ற மகனை....

தொலைபேசியில்
தொடரமுடியவில்லை!

இணையத்தில் இணைய....
இல்லத்தில் வசதி இல்லை!

புறா விடு தூதும் இனி
பலிக்காது என்று....

கற்றை கடிதங்கள் எழுதி
கன்றிப்போய் வலிக்குதென் விரலே!

உன்னாலும் எனக்கு தூது சென்று ....
உதவ முடியாதென வருந்தி ....

பாவமிந்த தாயென்று...
பார்க்க வந்தாயோ??!!

நிலவே, நீ என் செய்வாய்??!!

இருபக்கங்கள்  கொண்ட பூமிக்கு ஒரே நிலவு!
இங்கு இரவானால், அங்கு பகலாமே??!!



Wednesday, September 7, 2016

அரிச்சுவடி மாணவனானேன்!

வானத்தை வசப்படுத்தும்
வல்லமை மிக்க கலைகள்!

ஆகாயத்தை தாண்டியும்
ஆராய வேண்டிய அறிவியல்!

கண்ணுக்கு புலப்படாத
நுண்ணுயிரிகளின் சாம்ராஜ்யம்!

ஆழ் கடலில் புதைந்திருக்கும்
அதிசய உண்மைகள்!

ஆர்வத்துடன் படித்ததில்
ஆயுள் பாதி கழிந்தது!

பட்டங்கள் குவிந்து
பாதி வீடு அடைத்தது!

கையெழுத்துக்காக காத்திருக்கும் கோப்புகள்
கால நேரமின்றி உழைத்ததில்....

பருவம் தாண்டியபின்
திருமணம் முடிந்தது!

குடும்ப வாழ்க்கையில்
அடடே என்ன ஆச்சரியம்??!!

பட்டத்தை கொடுத்துவிட்டு
பரிட்சைகளா??!!

குழம்பி போனேன்
குடும்ப தலைவன் ஆன பிறகு!

ஆறு வயதில்...
'அ'  னா கற்று கொடுத்த தந்தையிடம்
அனுபவ பாடம் கற்க...

மிக்க பணிவோடு
மீண்டும்
அரிச்சுவடி மாணவனானேன்!

Tuesday, September 6, 2016

என் ரகசிய சிநேகிதி!

உலகத்தின் பார்வைகள்
என்னை சோதிக்கும்....

கண்கள் மீன்களென
கட்டுக்கதைகள் கூறும்....

கூந்தல் கார்மேகங்களென
கவிதைகள்  சொல்லும்....

உண்மை சொல்லும் ஒரே
உயிர்த்தோழி நீ தான்....

என் முகம் காட்டும் கண்ணாடியே!
நீயே என் ரகசிய சிநேகிதி!

Monday, September 5, 2016

ஆறாம் அறிவு!

கோலிகுண்டு கண்களும்,
விசிறி போன்ற விரிந்த இமைகளும்,
பிஞ்சு இதழ்களால்
இறுக்க மூடிய வாயுடன்
எனை முறைத்தது 
எதிர் வீட்டுக்குழந்தை!


பிறகு,
அருகில் மெதுவாய் வந்தது,
தயங்கி எனை தொட்டு 
சரேலென கையை பின் இழுத்து,
சந்தேகமாக என் முகம் படித்தது!


மெல்ல என் தலை தடவி,
மிருதுவான கைகளால் முகம் பிடித்து,
மகிழ்ச்சியுடன் என் கன்னத்தில்,
முத்தமிட.....


நான் ஆர்வமேலிட 
நன்றியுடன் சந்தோஷமாக 
குழந்தையின் முகத்தருகே 
குதூகலமாய் சென்ற போது....


"தட் தட்" என் முதுகில் விழுந்த அடியால் 
ஓட்டம் பிடித்தேன் வலியில்.


"யாரம்மா பொறுப்பில்லாம...
நாய் குழந்தைய கடிக்க வருதில்ல? "

கம்பீர குரல் ஒலித்தது தொலைவில்.....

கை வீசம்மா கை வீசு 2.0


கை வீசம்மா கை வீசு!

தாயுடன் காலை வீட்டில்
நலமாய் எழலாம் கை வீசு!


தந்தையுடன் என்றும் ஊரில்
பயமின்றி வாழலாம் கை வீசு!


சகோதரனுடன் நித்தம் பள்ளியில்
பாதுகாப்பாய் படிக்கலாம் கை வீசு!


ஜீ பி எஸ் உடன் என்றென்றும் உலகை
துணிவாய்  வெல்லலாம்  கை வீசு!


Saturday, September 3, 2016

ஜன்னல்கள்

பால் பாக்கெட் விழும் ஓசையில்...
பரவசமான காலையின் விடியல்!

குளியல் ஷவர் நீரின் ஓசையில்...
குதூகலமான மனதின் தொடக்கம்!

காபி  டம்ளர் ஓசையில்...
நாவில் தானே சுரக்கும் எச்சில்!

குக்கர்  விசில் ஓசையில்...
குளிர்ந்தது வயிறு!


மாலை......


பறவைகளின் ஒலியில்...
பரபரப்பு  எழும் மனதில்!

காலிங் பெல் சத்தத்துடன் "அப்பா சாப்பிட்டாரா?"
காதிற்கு மதுரகானம்!


இரவு......


தட்டின் ஓசை...
தாலாட்டாய் கேட்க!

கண் அயர்ந்தேன் நிம்மதியாக....


கண்கள் இல்லாத வாழ்க்கை
கதவுகள் இல்லாத வீடு!

ஓசைகளே என்
ஜன்னல்கள்!

Thursday, September 1, 2016

ஆண்மையையும் போற்றுவோம்!



பதின் பருவத்தில்
பெண்ணிற்கு விழா, சிறுமிக்கு
பெரிய மனுஷி
பட்டம்!


திருமண பந்தத்தில்
தாய்மைக்கு மட்டுமே விழா


கொண்டாட்டங்கள் நிறைந்த
குலமகளுக்கு உதித்த குழந்தை....


ஆணாக இருந்தாலும்
ஆனந்தப்படுவதே ஆதார சக்தியான
பெண்மையின் பெருந்தன்மை


பதின் பருவத்தில், ஆண்
பெற்றோருக்கே தோழனாம், பின்னர்
குடும்பத்தையே
குறையின்றி காக்கும் வீரனாம்!


பெற்ற குழந்தைக்கு பூமியில்
பயமின்றி வாழ போதிக்கும் ஆசானாம்!


ஆண் மகனே
உலகமே
உவந்து போற்றும்
உன்னத சக்தியை  கொண்டவனே!


பெண்மையை போற்றும்
புண்ணிய நாடிது


உன் போன்ற உன்னத சக்தியை
உருவாக்கும் ஆதார சக்தியின் பெருமைகளை


ஐயமின்றி நீ உணர்ந்தால்....

ஆண்மையையும் போற்றுவோம்!!


Monday, August 29, 2016

ஆண் கல்வி!

ஆண் கல்வி
அத்தியாவசியம் இன்று


ஆரம்பமுதலே
ஆதாரக்கல்வியாக...
அறிந்திடு நல்மகனாக ....
அன்புத்தாய்மையின் அழகை


வீரமிக்க  ஆண் கல்வியால்....
வாசமிக்க பூவான - உன்
சகோதரியை  போல
சக பெண்களை மதிக்கும்
சிறந்த தனயனாக...


விவேகமிக்க தலைவனாக....
உன் பெண் குழந்தையை
மற்றொரு
மலாலா வாக்க....


ஆண் மகனே!
கற்க வேண்டும் நீ
கல்வி.....

அதிசயப்பூ


பூமியில் வேரில்லை....

புதிராக தண்டுமில்லை....

அந்தரத்தில்....

அதிசயப்பூ....


நிலவு!