Thursday, November 3, 2016

ஏனிந்த தாமதம்??

அதிகாலை பொழுது
என்றும் போல் புலர்ந்தது!

குளுகுளு அறையின்
குளிர்ச்சி தூங்கேன் என்றது ஏக்கத்தோடு!

மூடிய சன்னல்களையும்
மீறி வந்தது பறவைகளின் பள்ளியெழுச்சி!

உதடுகளில் புன்னகை
ஓடி வந்து ஒட்டிக்கொள்ள...

தூக்கியெறிந்தேன் போர்வையுடன்
தூக்கத்தையும் சேர்த்து!

ஆனால்.,..

உழைத்து தேய்ந்த கால்கள்
ஊன்றமுடியாமல் வலித்தன!

தாயின் கருவறையில் உதைக்க ஆரம்பித்து
தள்ளாடும் வயது  வரை உழைப்பதாலோ??!!

பாதத்தில் துவங்கி முட்டி வரை
போக்குக்காட்டிய வலியை...

பொறுமையாக குறைத்தேன்
பயிற்சிகள் பல செய்து!

தவறி விழுந்த வலியால் பிள்ளை பருவத்தில்
தத்தாமல் நடக்க கற்றேன்!

ஆசிரியரின் பிரம்படி வலிக்கு
அஞ்சியதால் பட்டம் பெற்றேன்!

தண்டனைகளின்  வலிக்கு பயந்து
தவறுகளை களைந்தேன்!

வலிகள்தான் வருமுன் காத்து
வழிகாட்டும் நல் நண்பனென்றல்லவா நினைத்திருந்தேன்??!!

வேகமான வாழ்க்கை சூழலில்
வெற்றி பெற நேரம் காலம் பாராமல் ஓடியதால்...

அலட்சியமாக இழந்து விட்ட
ஈடில்லா உடல் நலத்தை...

இம்முறை இவ்வலியும் மிக தாமதமாக
இடித்துரைப்பதேனோ??!!

3 comments: