சித்திரை மாதம்
கத்திரி வெய்யில்...
தலையை ஊடுருவி
தயவின்றி தகித்தது!
புற்களும் வெப்பத்தால்
பொசுங்கின பூமியில்!
தள்ளாத வயதாகிவிட்டாலும்
தலைப்பாகை கட்டி....
கண்களில் கருப்புக் கண்ணாடியுடன்
கைகளால் தள்ளுவண்டியில்.....
இழுத்து வந்தேன் ஜில்ஜில் ஐஸ்க்ரீமை
கழுத்தில் வழியும் வியர்வையுடன்!
முதுகு முழுதும் ஈரமாகி வழிய....
முகத்தை துடைத்து கைத்துணியும் ஈரமாகியது!
பகல் வெயிலை சிறிதும் சட்டை செய்யாத
பிள்ளைகள் ஓடி வந்தனர்!
"ஐஸ்க்ரீம் தாத்தா!" என கத்தியவாறே
ஐந்து ரூபாய் தாள்களுடன்!
வெயிலிலும் குளிரடித்தது மனதில்
வெட்ட வெளி மலர் தோட்டம் போலானது!
மகிழ்ச்சியில் பிள்ளைகள் ஓட
மலர்ந்தது சுய சம்பாத்தியத்தால் என்
மனதும்!
சில்லறைகள்
சுமப்பது மிகவும்
சுகமானது!
'வீட்டில் ஓய்வு எடுங்களேன் அப்பா'
மகனின் வார்த்தைகள் மனதை வருடினாலும்....
பாலின் ருசிகண்டுவிட்ட பூனைபோல்!
பிறர் மதிப்பில் உயர்ந்து
போற்றப்பட உதவும்
உழைப்பின் ருசியை
உணர்ந்துவிட்டபின்...
வயோதிகத்தில்
உண்ணும் மருந்துகளைவிட
ஓய்வு கசப்பதென்னவோ
உண்மைதான்!
முத்துப்போல் ஜொலித்து
முதல் மரியாதையை பெற்று தருகின்றன
உழைப்பவனின்
வியர்வைத்துளிகள்- என என் சொந்த
கருத்துக்களில்
செருக்கேற நடந்தேன்....
ஒருவேளை .........
அடாது ஆடும் கடலும்
உவர்ப்பது .....
அயராது உழைக்கும்
அலைகளின்
வியர்வையாலோ ??!!
என் மனமும்
எடுத்து கொடுத்தது
எழுச்சிமிகு எண்ணங்களை.....
Super chithi
ReplyDeleteThank you honey!
DeleteSuper chithi
ReplyDelete