Thursday, October 6, 2016

அழகின் ரகசியம் இதுதானோ??!!


முழுமதியின் வசீகரத்தால்....

வானில்
விழாக்கோலம் பூண்டது!

நீலப்பட்டில் பதித்து வைத்த
நட்சத்திர வைரங்கள் ஜொலிக்க...
ஆடம்பர ஆடையணிந்து மகிழ்ந்தது
ஆகாயம்!

கடல் தன் அலைகளால்
கரகோஷம் எழுப்பி நிலவின் அழகை
வானுயர புகழ்ந்து கொண்டிருந்தது
ஓயாமல்!

பறவைகளும் விழாவில்
பங்கு கொள்ள முயன்று
பறந்து பார்த்தன உயரமாக....

ஆனால்....
கானல் நீர்
கண்ட மான் போல...
ஆகாயத்தை அடைய முடியாமல்
அந்தரத்தில் மிதந்தன ஏமாற்றத்தோடு!

கிணறு கூட 
கிடைத்ததே பெரும்பேறு என்று
நிலவை பிம்பமாக்கி பார்த்து மகிழ்ந்தது
நீருக்குள்!

சிறு குழந்தைகள்
சோற்று கவளங்களை
சட்டென  முழுங்கின
சந்திரனின் அழகில் மயங்கி!

முழு நிலவை தூது அனுப்பினர்
முகம் காண முடியாதவர்கள்!

இவ்வாறெல்லாம்...

அழகினால் உலகையே மயக்கும் வெண்ணிலவே....

உன் இயற்கையான அழகு குறையாமல் இருக்கத்தான்
உயிரினங்கள் வாழ
இடமளிக்க மறுத்து விட்டாயோ??!!

5 comments: