Wednesday, September 21, 2016

இயற்கையே, உனக்கு ஒரு கேள்வி...

மழைக்கால மேகங்கள்
மயங்கி திரியும் வானில்!

நட்சத்திரங்கள் மறைந்து நின்று
நகராத கருமேகங்களை முறைக்கும்!

அடாது கொட்டும் மழையில்
இடுப்பு வரை தண்ணீரில்...

மெல்ல நகரப்பார்க்கும்
மக்கள் கூட்டம்!

பேருந்தில் சென்றவர்கள்
படகில் வீடு திரும்புகின்றனர்!

இந்த வெள்ளத்திற்கு
என்ன சிக்னல் கொடுப்பது
என்று குழம்பி பழுதாகி
எல்லா திசையிலும்
பச்சை காட்டும்
போக்குவரத்து சிக்னல்!

தொலைபேசி ஆபத்திற்கு உதவாமல்
தொல்லைபேசியாகின்றது!

மின்சாரத்தை மட்டும்
மிகவும் நேசித்து விட்டதால்
சில மணி நேரமாவது  வெளிச்சம் கிடைக்க
சிம்னி விளக்கு கூட இல்லை!

கவிழ்ந்து இருக்கும் இருளில்
கள்வர்களின் நடமாட்டம்
உதவும் நெஞ்சங்களை கூட
உள் தாழ்ப்பாள் போட வைக்கும்!

தற்காலத்தை ஒரே பொழுதில்
கற்காலமாக புரட்டிப்போட்டு...

அனைத்துயிரையும்
ஆட்டி படைக்க வல்ல இயற்கையே!

உன்னை செயற்கை வெல்ல
அமைதியாக அனுமதிக்கிறாய்!

பின்னொருநாள் உரிமையோடு  நீயே
ஈடு செய்து கொள்கிறாய்!

இயற்கையே, உனக்கு ஒரு கேள்வி...

உனக்கு இழைக்கப்பட்ட பிழைகளை
எந்த கணினியில்
நீ பதிந்து வைக்கிறாய்?

4 comments: