Saturday, September 17, 2016

பொன் மானல்ல பொய் மான்!

பூங்காக்களின் அழகு இன்று...
புது அர்த்தம் பெறுகிறது!

கண்மூடி ரசிக்கிறேன்...
காட்சிப்பிழையோ??!!

இதமான காற்று...
அதனை தென்றல் என்பார்களே??!!

என் நாசிக்குள் நுழைந்து 
இதயம் வரை இனித்தது!

இத்தனை விதமான மலர்கள் 
இவ்வுலகில் இருக்கிறதா??!!

கடவுள் மிகுந்த கலைத்திறனை 
காட்டியுள்ளார் பூக்களில்!

மஞ்சள், ஊதா, கருநீலம் 
கணிக்கவே முடியாத கலவைகளில் பூக்கள்!

பொறாமை பொங்கியது மனதில்...
பூக்களுக்கு அழகிய  பல வண்ணங்களா??!!

என்மீது ஏதோ வந்து விழுந்தது 
"என்ன இது? பறவையின் எச்சமா?"
"என் பொறாமைக்கு கிடைத்த பரிசோ?" கண்திறந்து பார்த்தால்...

நெகிழிப்பை ஈரத்துடன் என் தோளில் 
நச்சென ஒட்டியிருந்தது!

எதிரில்...
உடைந்து போன
ஊஞ்சலில் அமர்ந்து, தண்ணீர் அருந்திவிட்டு...

வீசிய நெகிழிப்பை பற்றிய 
விவரமே அறியாமல் 
வாய்த்துடைத்துக் கொண்டிருந்தது ஒரு குழந்தை!

சுற்றிலும் ஒரு சிறு புல்
செடி கூட இல்லாத வறண்ட பூங்காவின்...

மண்ணின் புழுதியில் குழந்தைகள்  உற்சாகத்தில் 
மகிழ்ந்து திரிந்தனர்

பூந்தடாகத்திற்கு வந்த
பொன்மானை கண்டது போல்!

இக்குழந்தைகள்  உணரவில்லை அவர்களுக்காக 
இவ்வுலகில் நாம் விட்டு வைத்திருப்பது...

பொன் மானல்ல 
பொய் மானென்பதை!!

2 comments: