Wednesday, October 12, 2016

ஆயுதம் செய்தோம்...


சுள்ளென்று சூரியன் சுட்டு விட்டதால்
சிவந்து விட்ட வானம்
நிலவு வந்து நின்றதும்
நீலமானது மீண்டும் குளிர்ந்து!

தணிந்த வானத்தை
தாலாட்ட வந்தன
குளிர் மேகங்கள்
கூட்டம் கூட்டமாக!

சத்தமில்லா பகுதியாக்க
சாத்தியமே இல்லாமல்
விண்ணை கிழிப்பது போல்
விமானங்கள் வந்தன விரைவாக!

வெகுண்டெழுந்த மேகங்கள்
வெண்திரையிட்டு பாதையை மறைக்க
அலட்சியமாக கிழிக்கப்பட்டு
அறிவியலுக்கு பலியாகின!

நிலவும் பயந்து நின்றது
நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வருகைக்கு பிறகு!

காற்றும் கூட கலங்கியிருந்தது
காடுகளுக்கு நேர்ந்த கதியால்!

கடலும் கதறியது
பனி உருகிய பாரம் தாங்காமல்!

மிதமிஞ்சிய அறிவால்
மட்டில்லாமல் மகிழ்ந்தாலும்
பக்கவிளைவுகள் நமக்கு
புரியவைக்க போராடுவதை பார்த்தால்...

ஒரு வேளை நாம்....

நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு
அடிக்கிளையை அறுக்கிறோமோ??!!

அறிவியல் என்னும் ஆயுதத்தால்!!

1 comment: