Tuesday, March 14, 2017

இருவரிக் கவிதைகள் - 2


மண்

உயிரிகளின் உறைவிடம்
உயிரற்றவைக்கும் புகலிடம்!


வண்ணம்

காட்சிகளுக்கு உயிர்ப்பளித்து
கண்களுக்கு விருந்தாக்கும்!


விதி

கணக்கு போட்டு பழகிய மனம்
எதிர்பாராத செயலை ஏற்க சொல்லும் காரணம்!


அடக்கம்

மனதில் எண்ணங்கள் மிக உயர்வாகவும்
எளிய வாழ்க்கையும் கொண்ட உயர் மனிதர்கள்!


Thursday, March 9, 2017

கருவறை உறக்கம்!

கவிந்த இருளில் காட்சிகளில்லா கண்களுடன்
முன்ஜென்ம நினைவுகள் முள்படுக்கையாக்கிட..

திரும்பிக்கூட படுக்க முடியாத
தொல்லையான தூக்கமது!

உடலை "ங" போல் வளைத்திருக்கும்
வேதனையான பயிற்சியது!

தன்னை சுமக்கும் தாய்போல் கருவறை  சிசுவும் கூட
தன்னுறக்கம் இழக்குமோ?

ஒற்றைக்குரல்!

தனிமரம் தோப்பாகிய விந்தை இது
தனிமையில் குரலெழுப்பிய சிந்தை அது!

தலைவனின் ஒற்றைக்குரலின் ஓசை
தலைவிக்கு சங்கேத பாஷை!

சிசுவின் ஒரு சிறுசினுங்கல் அதன்
பசியாற்றிடும்  நடு சாமத்திலும்!

மௌனத்தின் ராகம் அதனை புரிந்த
மனதை  நாடிப்  போகும்!

தவறவிட்ட தருணங்கள்....


பாசத்தை கண்களில் தோய்த்து 
புன்னகைக்கையில்....
புதைந்துதான் போகிறேன் 
அவளன்பில் நான்!

வீட்டை நான் நெருங்கும் முன்னே 
வேகமாக ஓடிடும் என் மனம் அவளைத்தேடி!

பள்ளிப்படிப்பை முடிக்காதவன் நான் 
பாரதியாய் என்னை எண்ணி 

உவகை கொள்வேன் அவள் 
உச்சியை முகர்ந்து விட்டு!

வானிலை போல் இப்போதெல்லாம் 
வறட்டி எடுக்கிறாள் என் மகள் 

எரிச்சலும் கோபமும் 
எங்கிருந்து வந்ததோ?

பதின் பருவம் என் செல்வத்தை 
பாடாய்படுத்துவதை தடுக்க இயலாமல் 

மாற்றிக்கொள்கிறேன் என் முன்கோப குணத்தை 
மகளின் துன்பம் குறைக்க!

பெருமையும் கொள்கிறேன் நானொரு 
பொறுப்பான தந்தையென்று...ஆனால் 

மனைவியின் உடல்மாற்றங்களை உணராது அவள் 
மனதை நோகடித்த தருணங்களை எண்ணுகையில் 

வெட்கித்தலை குனிகிறேன் - நேற்றுவரை 
வேங்கையென்றிண்ணியிருந்ததற்காக!

முதல் சாதனை!

தாயின் கருவில் தனியே உதித்திருந்து..
தந்தையின் குரலை கேட்டு ரசித்திருந்து..

தொப்புள் கொடி வழியே 
தப்பாமல் தன் பசி தானாய் தீர்ந்துவிட..

முழுவளர்ச்சியடைந்து  பெற்ற  விடுதலையால் 
வயிற்றுப்பசி உயிரை வதைக்க முதன்முதலாய் 

வாய் வழியே பால் உண்டு தன்னுயிர் காத்ததே   
வாழ்வின் முதல் சாதனையாகுமே !

மகுடி மனசு!

போதை மருந்து  அடைக்கலம் கொடுத்த
உடலை  அடிமையாக்கும் !

மீண்டு வருவதற்குள் 
வீணாகும் பொன்னான வாழ்நாட்களும்!

புகழ் போதைக்கு மனதில் 
புகலிடம் தந்துவிட்டாலோ...

போற்றுவோர் வசம் பொத்தென விழும் என்றும் 
தூற்றுவோர்க்கு நல் செய்தியாகும்  மகுடி மனசால்!

Wednesday, March 8, 2017

மகளே மங்கா புகழே!


பிஞ்சுக்கரம் பிடித்து மகளை
பள்ளிக்கூடம் கொண்டு சேர்த்தேன்!

அறிவியலும் அன்பும் இணைந்த புது
அவதாரம் எடுத்துவிட்டாள்!

அரவணைப்புடன் அந்நிய தேசத்தையும்  எனக்கு
அறிமுகம் செய்துவைக்கிறாள்!

தவமிருந்த தகப்பன் நான் பெற்றுவிட்டேன்
தாயையே மீண்டும் மகளாக!

Tuesday, March 7, 2017

செந்தமிழ்ச் சாரலில் செய்த கூடு!

செந்தமிழ்ச் சாரலில் செய்த கூடு!
பைந்தமிழ் உரிமையாய் உறையும் வீடு!

மணமணக்கும் சமையலறை நாவிற்கு விருந்தாய்!
கலகலக்கும் நகைச்சுவையோ மனதிற்கு மருந்தாய்!

உலகாளும் தமிழை வளர்க்க
ஒவ்வொரு நாளும் சான்றிதழ் மழை!

தெய்வப்  புலவரை வணங்கி
தினம் ஒரு குறளால் துதிக்கலாம்!

அவ்வையின் பாதம் பணிந்து
அமுத மொழிகள் அறியலாம்!

ஒரே சொல் மந்திரம் போல்
ஓங்கி ஒலிக்கிறது ஒரே சான்றிதழில்!

தினமும் சுவைக்க
திகட்டாத குறும்பா!

ஆழ்ந்த அர்த்தங்களுடன்
ஆன்மீகப்  பதிவுகள்!

வாரத்திற்கு ஒரு விருந்தாளியாய்
வாரக் கவிதைகளும் உண்டு!

சிறந்த கவிஞர்களின் ஆசியுடன்
சீர்மிகு நேர்காணல்!

தமிழைப்  பிழையின்றி கற்க
தாய் போன்ற அரவணைப்புடன் அறிவோம் தமிழ்!

கவிஞர்களுக்கு கொண்டாட்டம் தான்
காலை முதல் இரவு வரை!

இரகசியம்

நிறைவேறாத ஆசைகள் மனதில்
நிறைந்திருந்த காலத்தில்

எதிர்பார்ப்புகளையே  இலக்குகளாக்கி  உழைத்து
எட்டிவிட்ட உயரங்களை எண்ணிப்  பூரிப்படைந்துகொண்டிருக்கையிலே

மூடியிருந்த மனதின் இரகசிய பெட்டகங்களைத்  திறக்கும்
மந்திரக்கோலாய் விளங்குகின்றது

என்னால் நிராகரிக்கப்படுகின்ற என் வாரிசுகளின்
எல்லையில்லா எதிர்பார்ப்புகள்!

விழித்திடு நீ பிழைத்திடு

இலக்கு அதுவே உன் நோக்கமாக இருக்கட்டும்
விலக்கு இடையே வரும் சலசலப்புக்களை

காத்திரு கொக்குபோல் உருமீன் வரும்வரை  
கனிந்திடும் காலமும் நம்பிக்கையை வளர்த்திடு

விழித்திடு நீ பிழைத்திடு நல்வழியில்
வளர்ந்திடு உன்  வம்சம் விதைத்திடு

காதல் ரோஜாவே!

கண்கட்டு வித்தையோ இது என் மனம்
தறிகெட்டு ஓடுதே அவள்  பின்னால்!

எனக்குப்  பின் பிறந்தவள் தான்  ஆனாலும்  
என்னை ஆட்டிப்  படைக்கின்றாள்! 

இரும்பு மனம் படைத்த என்னை
இருப்பு கொள்ளாமல் தவிக்க வைக்கின்றாள்!

உண்மையறியாமல் எதையுமே ஏற்காத  என்
தனித்தன்மை இழந்து நிற்கின்றேன்!

என் மனதை நானுரைக்க
என்னவளை நாடினால்...

கட்டிளங்காளை என்னை மௌனத்தால்
கட்டிப்போட்டு ஓடுகிறாள்!

ஆராய்ச்சிக்கல்வியில்  மூழ்கி
ஆராய்ந்து படித்துப்  பெற்ற..

பட்டங்கள் என் பெயருக்கு பின்னால் நின்று
திட்டங்கள் போட்டு எனை கேலி பேசுதே!

நங்கையவள் மனம் படிக்க  ஒரு
பல்கலைகழகமும்  உள்ளதோ?

இதயம் என்ன விலை?

அறியாத வயதில் மணமுடித்து
ஆறேழு பிள்ளைகள் பெற்று புகுந்த வீட்டை

ஆயுள் முழுக்க அனுசரித்து
அற்புதமான உறவுகளை உருவாக்கி பிள்ளைகளின்

உடலைப்பேணி வளர்த்து பத்தாதென்று
இரண்டு மூன்று தலைமுறைக்கு உழைத்தின்று

படுக்கையிலேயே   பாசப்  பார்வை வீசும் தாயே  செல்ல
தலைப்பிள்ளைக்கு சொல்வாயா  உன்  இதயத்தின் விலையை?

நீதிக்கு முன்னால்!

நீதிக்கு முன்னால் அனைவரும் சமமென்று
நீதியை முதலில் உலகிற்கு வகுத்துக் கொடுத்து  பின்

தவறு புரிந்தவன் தாம்  பெற்ற பிள்ளையே ஆயினும் தண்டிக்க 
தேர்க்காலில் மகனை இட்டு தாம் வகுத்த நீதிக்கு உயிர் கொடுத்த சோழன்!

தமிழன்னை பாதம் பணிந்து பெற்ற முத்தமிழை
சங்கம் வைத்து வளர்த்து

பாராளும் மன்னன் ஐயம் நீக்க
பாமாலைகள் கோர்த்து மகிழ்ந்து

பாட்டெழுதி தந்தது  வையகமே போற்றி வணங்கும்
பரம்பொருளே  என்றாலும் குற்றமென்று உரைத்து

தமிழின் தரத்திற்கு குறைவராது தடுக்க
தன்னுயிர் தந்து காக்க துணிந்த நக்கீரர்! மாண்புமிக்க

பெரியோர்கள்   துலாக்கோல் போலிருந்து காத்த நீதியை
பேணி நாமும் பாதுகாத்திடுவோம்!

நிலவில்லா மேகம்!

பொறுமையில் சிகரத்தையே எட்டிவிடும் தன்
பெருமையை  மறந்த பெண்மையே..

உற்சாக உலக ஓட்டத்திற்கு என்றுமே
அச்சாணி  நீயடி!

உன் தனிமை துயரம் நீண்டு
வானையும் தாக்கிவிட்டதோ?

கருமேகங்களில் நிலவும் மறைந்துகொண்டு  தன்
கனத்த இதயத்தை சொல்லுதோ ?



இருவரிக்கவிதைகள்


கனவு

ஆழ்மனதின் திருத்தப்பட்ட பதிப்பின் ஒளிபரப்பு
ஆயுளுக்கும் இலவசம் எரிபொருள் தேவையின்மையால்!


காதல்

முன்ஜென்ம பந்தங்களை மட்டும்
மீண்டும் தொடரவைக்கும் அதிசய மந்திரம்!


கிம்பளம்

துரிதகதியில் சாதிக்க நினைக்கும்
திறமையில்லாத மூடர்களின் ஆயுதம்!


கீழ்ச்செயல்

காமவெறி  பிடித்தும் நாட்டிலேயே உலவும்
கூண்டில் அடைக்கவேண்டிய காட்டுவிலங்குகள்!

முகமூடி

நரம்புகளும் எலும்புகளும் ரத்தமும்
நிறைந்த உடல் கொண்டது  உலகின்  உயிரனமே!

மேலுரையாய் தோலிருக்க போதுமென
மௌனமாய் ஏற்றதிந்த விலங்கினமே!

குளிர் வெயில் தாக்காமல் காக்க  நாளும் நமக்கு
குடைபோல் ஒரு உடைதேவைதான் ஆடைகள் என்றுமே! சிலருக்கோ

அகத்தின் அழகை  வெளிக்காட்டிவிடாமல் மறைக்க
அத்தியாவசிய தேவையாகிவிட்டதோ ஒரு முகமூடி?

குழப்பம்!

அளவில்லாத வெள்ளம் பாயும் நதி!
அதிலோடும் ஓடம் அந்தோகதி!

எண்ணங்கள் மனதில் சங்கமித்தால்
திண்ணமான முடிவுகள் முடங்கிடுமே!

பிறர்கூறும் புறங்கூறல்கள்  அதனை
புறக்கணித்து விடு பெண்ணே!

நம்பிக்கை எனும் திசைநோக்கி
வாழ்க்கை படகை செலுத்த  குழம்பியோடிடும்  குழப்பமும்!

சிறை!

சிறையில் சிக்கிவிட்ட
சிறுத்தையோ இவன்?

அன்னையின் அன்புச்சிறையோ அல்லது மனதை
ஆள்பவளின் காதல் சிறையோ?

தினவெடுத்த
தோள்வலிமை கொண்டவனோ?

உடைத்தெறிய உள்ளமின்றி
உரமேறிய தன்  கரங்களுக்குள்ளே

சிறைக்கம்பிகளை
சிறை  வைத்தவனோ?  மாறாக

சிறைக்கம்பிகளுக்கு 
கறை படிந்த கரங்களுடன் 
உரையாடுவதும் பிடித்த வாடிக்கைதான்

தவறிழைத்திருந்தால் தப்பாமல்
பிழையதனை  நீக்கி வீண் 
பழிதனை களைந்து 
வெளி வந்திடு நீ 
விடுதலையாகி!!

சிசுவே...

தாய்ப்பால் குடிக்கும் முன்
புட்டிப்பால் புகழறிந்து!

தாலாட்டு கேட்கும் முன்
குறுவட்டு கவி கேட்டு!

பாட்டி வைத்தியம் மறைந்து
ஆண்டிபயாடிக் துணை நிற்க!

அத்தை எனுமுன்
அதனுறவு அறவே இன்றி!

மாமனை காண
மறுஜென்மம் வாய்க்குமென நம்பி!

பிஞ்சுக்கரம் தொடும்
நஞ்சுக்கொண்ட மானிடனை சேர்ந்து
வலையில் சிக்கி
வகையறியாது  உழலும்...

சிசுவே... இனி
சிறந்த இடம் எதுவோ
சிறப்பாக நீ வளர?