Wednesday, October 26, 2016

வள்ளல் பிறந்தான்!!


புன்னகை பூக்கும் பிள்ளைச்செல்வமே...
பல்லில்லா ஈறுகள் தெரிய...

சின்னஞ்சிறு சிவந்த நாக்கு
சிரிப்பில் மேலண்ணத்தில் ஒட்ட...

கண்களை அகல விரித்து
காட்டிக்கொடுக்கிறாய் உன் கள்ளமனதை!!

மயிலிறகால் தீண்டுவதுபோல்
மயக்க வைக்கும் ஒரு பார்வை!!

மெத்தென்ற பூப்பாதங்கள்
மெல்ல தத்தி நடந்து வர...

பஞ்சு போன்ற கன்னங்களில் என் உதடுகளை
பதிக்க சொல்லி தூண்டில் போட்டு....

பூப்போல அள்ளி உன்னை
பாசத்துடன் கொஞ்ச வைத்து...

கோடி இன்பம் தருகிறாய் வள்ளல்போல்
ஈடேதும் கேட்காமலேயே!

தந்தையென்னை முத்தமிட்டு
திக்குமுக்காடவைக்கிறாய்!!

ஆனந்தம் பொங்கும் மனத்துடன்
அன்பை அனைவருக்கும் பரப்புகின்றாய்!!

பாகுபாடின்றி இவ்வுலகில்
பழகி களித்தாடிடவே...

அறியாமையை அமிழ்தம் போல்
அருந்திவிட்டு வந்தாயோ??!!

தாயே பென்சைதென்!!


கடல் தாண்டி வந்தும்
கைபிடித்து என்னை காத்தாய் !!

ஊர் மாறினாலும் உணர வைத்தாய்
உன் பெயர் பென்சைதென் என்று!!

 என்...

தூக்கத்திலும் இன்பமாய் நீ
தரவிழையும் தெய்வதரிசனம்...

உன் மீது நான் கொண்ட
உண்மையான பக்தியாலோ??!!

ஏனோ நிஜத்தில் கண்கள் கலங்கி
உன்னை காண மனம் ஏங்குதே!!

எழுத்தில் வடிக்க உன்
எழில் உருவம் தோன்றுமோ??!!


இதயத்தில் உன்னை வைத்தேன்
இனி எவருக்கும் இல்லை இடம்  என்று!! நின்

அழகு பாதங்கள் விட்டு
அகல கூடாதென இதயம் துடித்தாலும்!!


அடம்பிடிக்கும் என்விதியோ
இடமாற்றம் செய்கிறது என்னை!!

தாய்ப்பசுவை இழந்துவிட்ட கன்று போல்
தங்ககூண்டிலுள்ள கிளியானேன்!!


மயக்கும் அழகில் மாதங்கி தாயாய்
மீண்டும் உன்னை கண்டேன்!

உற்சாகத்துடன் உன்னை காண ஓடினேன்
ஒரு பிடி சோற்றை கண்டுவிட்ட வறியவன் போல்!!

குளிர்ந்தது அகமும் கண்டுவிட்டேன்
கண்போல என்னை காப்பவளை!!

பிறவிப்பயன் பெற்றுவிட்டேன்
பிறகென்ன எனக்கினி விதியோடு ஒரு பேச்சு!!

Tuesday, October 25, 2016

கண்களே கண்களே!!

சிவந்த கண்கள்
சிறப்பாய் உரைக்கும்
உள்மனதின்
உஷ்ணத்தை!

திசை தெரியாமல் அலைந்து
திரியும் கண்மணிகள்
குழம்பும் சிந்தையை
கண்ணாடி போல் காட்டுமே!

குதூகலமான மனதை
குளிர்ந்த பார்வைகள்
உணர்த்துமே குறையின்றி
உலகிற்கு!

கலங்கிய கண்கள்
வெளிப்படுத்துமே
இதயத்தின்
எழுச்சியான உணர்ச்சிகளை!

தீர்க்கமான பார்வைகள்
தீர்மானித்த முடிவுகளை
திண்ணமாக உரைக்குமே
தடையின்றி!

பார்வையிலேயே
படித்துவிடலாம் உலகின்
பொக்கிஷங்களை
புறக்கண்களால்!

உள்நோக்கி திருப்பினால்
அறியலாம் தன் பிறப்பின்
அர்த்தங்களை
அகக்கண்களினால்!

ஐம்புலன்களிலேயே
அதிசயமாக
கண்களுக்கு மட்டும்
எத்தனை பக்கங்கள்!!

Friday, October 21, 2016

கிரி வலம் வந்தேன்!!


இரண்டாவது தலைமுறை நான்
எடுத்த பின் எழுந்த 

அடங்க வொண்ணா 
ஆவலாய் தந்தை வாய் திறந்தார்...

கடல் தாண்டி வந்தாலும்
கடந்த காலம் கண்களை கலக்குதென்றார்...

எங்களுக்காக உழைத்து தேய்ந்த அப்பாவின் 
ஏக்கத்தை ஆணையாக ஏற்றேன்...

தான் பெற்ற வெற்றிக்கு வித்து 
தாயகத்தில் உள்ளதென்றார் குல தெய்வமாக ஒரு மலையில்...

பறந்தோம்... தெய்வ தரிசனம் பெறவும்... 
பெற்றோரை மகிழ்விக்கவும்....

தங்குமிடம் தரமிருக்குமோ? நல்ல 
தண்ணீர் பருக கிடைக்குமோ? என்ற குழப்பங்களுடன்...

ஆனால்... என்ன ஆச்சர்யம்??

நாற்பது வருடங்களில் 
நகரமாய் மாறியிருந்தது சிற்றூர்...

விலையுயர்ந்த கற்களால் பதிக்கப்பட்டு 
விண்ணுலகம் போன்ற தங்குமிடம்...

தங்கும் அறையில் கூட
தெய்வீகம் கமழ்ந்தது!

பக்தி பரவசமாய் பிரமிப்போடு 
பல முறை சுற்றிவந்தேன் தங்குமிடத்தை...

கிரி வலம் செய்து 
குலதெய்வ வழிபாடு நடத்த 
குதூகலமாய் கிளம்பினால்...

அட அதிசயமே!!
எங்கு தேடியும் இல்லை மலை...

மனது ஆறாமல் 
மற்றவரிடம் விசாரித்ததில் புரிந்தது 

மலைக்க வைக்கும் மாற்றத்தை  சிற்றூருக்கு 
மலை தான் தன்னை தாரை வார்த்து தந்தது என்று...

Thursday, October 20, 2016

சக்தியா? சிவமா?

பட்டிமன்ற தலைப்பல்ல!
பாட்டி சொன்ன கருத்தல்ல!

விளையாட்டில் வெற்றி!
விண்ணைத் தொடுவதிலும் வெற்றி!

பெண்மை சாதிக்க துடிக்குது!
உண்மை உணர்த்த பார்க்குது!

ஆளும் திறனை வளர்க்குது!
ஆகாயத்தை வளைக்க நினைக்குது!

ஆணென்ன சளைத்ததா?
ஆண்மை விட்டுக் கொடுக்குமா?

ஆணும் ஜெயிக்கிறான்!
ஆளப் பிரயத்தனப் படுகிறான்!

சக்தியா? சிவமா?

ஆற்றல் மிக்க ஆண் பாயும் உயரம் மிக அதிகம்
ஆயிரம் பதக்கங்கள் பெறுவான்!

ஆனால் பாய வைத்தது பெண்மை தானே??

பெண் ஆணின் எதிரி அல்ல
பெண் ஆணுக்கு முன்னோடி!!

பெண்ணே நீ வெல்க! ஆணுக்காக...

உலகின் பார்வையை மாற்று பெண்ணே
உன்னால் மட்டுமே முடியும்!!

Thursday, October 13, 2016

வாசம்... இலவசம்!!

பாதையில் பயணிப்போரை
பரவசப்படுத்தி தன் வசப்படுத்துகிறது
மலர்களின்  வாசம்!

உரிமையாய் தென்றலும் வாசத்தை வாரிப்பூசி
உரைத்தது தான் பூங்காற்றென்று!

வண்டுகள் ரீங்காரம் செய்து உறுதிபடுத்தின
வளமான தன் வாழ்க்கையை!

வாசத்தை விலைபேசி
வாங்கிவிட விரும்பினர் பலர்!

தோட்டமிட்டவனின் திறமைகளை
நோட்டமிட்டனர் மனதில் வியந்தவாறே!

ஆளுக்கொரு செடி வாங்க எண்ணி
அனைத்து மலர்களுமே அழகாய்  தோன்றி...

ஆசையை பெருக்கிட அலைந்தனர்
அங்குமிங்கும் குழப்பத்தோடு!

ஓரிரு செடிகள் வாங்கி
ஒய்யாரமாக சென்றனர் ஏக்கத்தை மறைத்து!

தோட்ட சொந்தக்காரனுக்கு கூட
தொலைவில் தான் மச்சுவீடு!

ஆனால்....

பணத்திற்க்காகத்தான் என்றாலும் நீரூற்றி
பராமரிப்பவனுக்கு மட்டுமே...

தோட்டப்பூக்களின் மொத்தவாசமும் என்றும்  இலவசம்!!

Wednesday, October 12, 2016

ஆயுதம் செய்தோம்...


சுள்ளென்று சூரியன் சுட்டு விட்டதால்
சிவந்து விட்ட வானம்
நிலவு வந்து நின்றதும்
நீலமானது மீண்டும் குளிர்ந்து!

தணிந்த வானத்தை
தாலாட்ட வந்தன
குளிர் மேகங்கள்
கூட்டம் கூட்டமாக!

சத்தமில்லா பகுதியாக்க
சாத்தியமே இல்லாமல்
விண்ணை கிழிப்பது போல்
விமானங்கள் வந்தன விரைவாக!

வெகுண்டெழுந்த மேகங்கள்
வெண்திரையிட்டு பாதையை மறைக்க
அலட்சியமாக கிழிக்கப்பட்டு
அறிவியலுக்கு பலியாகின!

நிலவும் பயந்து நின்றது
நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வருகைக்கு பிறகு!

காற்றும் கூட கலங்கியிருந்தது
காடுகளுக்கு நேர்ந்த கதியால்!

கடலும் கதறியது
பனி உருகிய பாரம் தாங்காமல்!

மிதமிஞ்சிய அறிவால்
மட்டில்லாமல் மகிழ்ந்தாலும்
பக்கவிளைவுகள் நமக்கு
புரியவைக்க போராடுவதை பார்த்தால்...

ஒரு வேளை நாம்....

நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு
அடிக்கிளையை அறுக்கிறோமோ??!!

அறிவியல் என்னும் ஆயுதத்தால்!!

Tuesday, October 11, 2016

மகத்தான படைப்பு!!

கிணற்றுத்  தவளையாய்
கிடைத்த இடத்தில சுற்றுகிறாய்!

ஓடி ஓடி உழைக்கிறாய்
ஒரு பொருளும் சேமிப்பதில்லை!

ஒரே வேலையை என்றுமே குறையாத
உற்சாகத்தோடு செய்கிறாய்!

உன்னுடன் போட்டி போட்டு
உலகமே ஜெயிக்க பார்க்கிறது!


காலங்கள்  மாறலாம்
உன் வடிவங்களும் மாறலாம்!

ஆனால்...

உன்னை மதிப்பவருக்கு  கிடைக்கும்  புகழ் மட்டும்
ஒருநாளும் குறைவதில்லை!

இந்த உலகிலே
அறிவாற்றலில் மிகச் சிறந்த
மனிதனின் பிரமிக்க வைக்கும்
மகத்தான படைப்பு!

நீ தான்...

காலம் காட்டும் கடிகாரமே!!


Sunday, October 9, 2016

இன்று வருகிறாள்!!

துன்பத்தினால் துவண்டு
தனிமை அரக்கனுக்கு நான்
பலியாகிவிடாமல்
பாதுகாத்தவள்!

வாழ்வில் மீண்டும் ஒரு
வசந்தத்தை கொண்டுவந்தவள்!

என் மேல் அவள் கொண்ட நம்பிக்கைகள்
எனக்கு புது பொறுப்புகள் ஆயின!

அவளுக்காகவே சுவாசித்து
ஆத்மார்த்தமாக வாழ்ந்தாலும்...

காலம் மிகவும் பொல்லாதது
கைவரிசையை காட்டிவிட்டது  அவள் மனதில்!

மனமுருகி அவள் கெஞ்ச
மறுக்கவே  முடியாமல்

கண்கள் கலங்குவதை காண இயலாமல்
காத தூரம் அனுப்பினேன் கைமாறாக
அவளும் வாழ்க்கையில் தன்னம்பிக்கை பெற!

இன்று அவள் வருகிறாள்...

ஆறு மாத பிரிவு
ஆறு யுகம் போல என்னை
அறுத்தெடுத்த அடையாளங்களை
அப்புறப்படுத்தினேன்!

இதோ வந்து விட்டாள்!

இளைத்து போயிருக்கிறாள்
இரு நீல விழிகளில் கண்ணீருடன்
"அப்பா" குரல் தழுதழுக்க கதறி
அவள் அழுவதை பார்க்க
இன்று மட்டும் ஏனோ பெற்ற மனதில்
ஆனந்தம் பொங்குதே!

Friday, October 7, 2016

புரியாத புதிர்!!

எதிர் காலம் குறித்த பயத்தை
இளமையில் உதிக்க வைத்து...

வாழ்வின் வெற்றிக்கு இடைவிடாது
உழைக்க வைத்து - பின் மூப்பில்...

கற்ற கல்வியும் நினைவில் தேய்ந்து
கால் பாகம் ஆகிப்போனாலும்...

தாயிடம் சேயாய் பலமுறை
தன்னை மறந்து கேட்ட ஒரே கதை போல்...

திரும்பிப் பார்க்கவைக்கும் வாழ்வின்
தித்திக்கும் தருணங்களை...

நினைக்க நினைக்க மீண்டும்
நிஜம் போல சிலிர்க்க வைக்கும் ஞாபகங்களை...

மூன்றாவது தலைமுறை எடுத்து விட்டாலும்
முழு மூச்சுடன்   அசை போடுகிறாயே!

இளமையில் முதிர்ச்சியை நோக்கியும் - முதுமையில்
இழந்து விட்ட காலத்தை
இடைவிடாது துரத்தியும்...

மீண்டும் என்னை சேயாக்க துடிக்கும்
மனமே...

 நீ எனக்கு ஒரு புரியாத புதிர் தான்!!

Thursday, October 6, 2016

அழகின் ரகசியம் இதுதானோ??!!


முழுமதியின் வசீகரத்தால்....

வானில்
விழாக்கோலம் பூண்டது!

நீலப்பட்டில் பதித்து வைத்த
நட்சத்திர வைரங்கள் ஜொலிக்க...
ஆடம்பர ஆடையணிந்து மகிழ்ந்தது
ஆகாயம்!

கடல் தன் அலைகளால்
கரகோஷம் எழுப்பி நிலவின் அழகை
வானுயர புகழ்ந்து கொண்டிருந்தது
ஓயாமல்!

பறவைகளும் விழாவில்
பங்கு கொள்ள முயன்று
பறந்து பார்த்தன உயரமாக....

ஆனால்....
கானல் நீர்
கண்ட மான் போல...
ஆகாயத்தை அடைய முடியாமல்
அந்தரத்தில் மிதந்தன ஏமாற்றத்தோடு!

கிணறு கூட 
கிடைத்ததே பெரும்பேறு என்று
நிலவை பிம்பமாக்கி பார்த்து மகிழ்ந்தது
நீருக்குள்!

சிறு குழந்தைகள்
சோற்று கவளங்களை
சட்டென  முழுங்கின
சந்திரனின் அழகில் மயங்கி!

முழு நிலவை தூது அனுப்பினர்
முகம் காண முடியாதவர்கள்!

இவ்வாறெல்லாம்...

அழகினால் உலகையே மயக்கும் வெண்ணிலவே....

உன் இயற்கையான அழகு குறையாமல் இருக்கத்தான்
உயிரினங்கள் வாழ
இடமளிக்க மறுத்து விட்டாயோ??!!

Wednesday, October 5, 2016

ஒத்தையடி பாதையிலே!

விடியற்காலை...

பசும்புல் தரையில்
கொட்டிக்கிடக்கும் அழகில்
காலாற நடை பயில வந்தேன்!

ஊரே ஊர்ந்து செல்லும்
ஒத்தையடி பாதையது!

பாதி தூரம் கடக்கும் முன்னே
பகலாகி போகிறது!

இடையிடையே நெருஞ்சி முள்ளால்
இன்னல்கள் வேறு...

பல மைல் நடந்தும்
பாதையின் முடிவு
பகல் கனவு!

பயணத்தை இடையில் விட வழியில்லை
புலி வால் பிடித்த கதையாய்...

தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு
துச்சமாய் தெரிந்த பாதை

நெருங்கி வருகையிலே
நீளுதே மிக அதிகமாய்!

பதறி எழுந்தேன்
படுக்கையை விட்டு
பயங்கர கனவால் அவதியுடன்!

ஒரு வேளை...
வாழ்க்கை கூட
முயற்சிகளால் பின்னப்பட்டு
முற்றிலும் உணரமுடியாத முடிவுகள் கொண்ட
ஒற்றையடி பாதை தானோ??!!

Tuesday, October 4, 2016

வலியது! வலியது!


சிசு பேசும் முதல் வார்த்தை
சிறப்பம்சம் பெறுகிறது!

தாயின் மடி மீது
தவழ்ந்து கேட்ட கதைகளே நன்னெறிகள்!

ஆணையிட்ட தந்தையின்
அற்புதமான சொற்கள் மந்திரங்களாகின்றன!

ஆசிரியரின் வாய் மொழியில்
அமுத உரைகள்
ஏற்றமிகு
எதிர்காலத்துக்கு சாசனங்கள்!

மனைவியின் வார்த்தைகள்
மந்திரியின் மதியூகமாகும்!

ஏழையின் சொல் கூட
ஏறும் அனைவர் மனதிலும்
உயிர் பிரியுமுன் அவன்
உரைக்கும் கடைசி வார்த்தைகள்!

வார்த்தைகள் ஆயுதங்களை விட
வலிமையானவை!

மனிதனின் மனதை ஆட்டி படைக்கும்
மந்திரக்கோல் வார்த்தைகளே!

வயதான பின் வரும்
விவேகம்...
மௌனம் பழக
மெனக்கிடவைக்கும்!

ஒரு வேளை...
அதனால் தான்....

கடினமான பற்கள்...
கடக்க கூடாத
கதவுகளாய் உதடுகள் என
வார்த்தைகளை
உற்பத்தி செய்யும்
நாவிற்கு மட்டும்
கடுங்காவலோ??!!

Monday, October 3, 2016

ஓர் இரவு!!

அழகான உலகம்
அனைவரும் சமம் என்று
அமைதியாய் இயங்கி கொண்டிருக்க...

எல்லையில்லா
எதிர்பார்ப்புகள்
ஏக்க பெருமூச்சுகள் -  அனைவரிடமும்

பாம்பின் விஷமாய்
பரவ பொறாமை தீ
பொங்கி வழிந்த நேரம்...

வந்தது ஓர் இரவு...

ஆக்ரோஷமாக வானிலிருந்து
ஆர்ப்பரித்து தாக்குது
அடைமழை!

காற்றும் தன் பங்கை
கச்சிதமாக்க
சுழன்று அடித்தது
சூறாவளியாய்!

தங்கியிருக்கும் மரங்களில் சிறகுகள் நனைய
தன்னுயிர் மறந்து - பதறும்
தன் குஞ்சுகளை அரவணைத்து நம்பிக்கையூட்ட

முயற்சிக்கின்றன வானிலை
முன்னறிவிப்பை முற்றிலும் உணராத பறவைகள்!

கும்மிருட்டில் மிரண்டு
கிடைத்த இடத்தில சுருண்டிருந்தன தெரு நாய்கள்!

வேகமாக அடிக்கும் காற்று
வெகுவாக நம்பிக்கையின்மையை
விதைக்கின்றது அனைவரின் மனதிலும்!

போர்க்கால அடிப்படையில்
பரபரப்பாக தயாராகும் ராணுவ உதவிகள்...

தளராத மனதையும்
தளரவைத்து - வரப்போகும்

பேராபத்தை
புரியவைத்தது

மரண பயம்
மனதை உலுக்க

இரவின்  ஒவ்வொரு நொடியும்
கலவரத்துடன் கரைந்தது

விடிந்ததும் திடுமென புயலடங்கி
உதித்தது பிரகாசமான சூரியன்!

அனைவரும் உணர்ந்தனர்
உலகில் மதிப்பு மிக்கது - தன்
உயிர் மட்டுமே!!