Monday, February 20, 2017

வறுமையின் நிறம்!

வளமையில் வானவில்லின் வண்ணங்கள்
வகுத்தெடுக்கும் அளவுகோலாய் அவரவர் எண்ணங்கள்!

வேடங்கள் பூணுவது வேடிக்கை!
ஏற்றத்தாழ்வது  போற்றுவதும் இங்கே வாடிக்கை!

வறுமையின் நிறம் என்றுமே நிரந்தரம்!
வாழ்வில் உணரவைக்கும் உலகின் தராதரம்! 

பகுத்துண்டு வாழும் பண்பு!
பசியிலும் உண்டிங்கு அன்பு!

Monday, February 13, 2017

பூவே உனைக்கண்டு

பூவே உனைக்கண்டு நான்
பிரம்மித்து  நிற்கின்றேன்!

வானின் மேகங்கள்
வள்ளல்போல்  வந்து

மாரியதை பொழிந்திடவே
மண்ணும் குளிர்ந்து மணம் வீசியதே

சிறுவிதையும் துளிர்விட்டு
செடியாய் வளர்ந்து நின்றதே

கால்நடைகளின் பசிப்பிணியிலிருந்து தப்பிப்  பின்னும்
கால்மிதிபட்டு  அழிந்துவிடாமலும்  பிழைத்து

மொட்டேந்தி பிறகின்று நீயும்
மலர்ந்திட்டாய்

மகரந்த சேர்க்கைக்கு துணை செய்ய நீயே
மணம் வீசி அழைப்பிதழும் அனுப்பிட்டாய்

வண்ணத்துப்பூச்சியின் வருகைகண்ட  மகிழ்ச்சியில்  -நீ
வந்த பாதையின் கடினங்கள் மறந்தனயோ?

சேர்த்துவைத்த தேனையெல்லாம் மொத்தமாய்
சொரிந்துவிட்டாயே!

நில் கவனி கொல்!

உணவுக்காக அலைகின்றோம் உயிரைக்காக்க விழைகின்றோம்
வயிற்றுப் பசியை  துரத்திடவே   கடலும்  மலையும்  கடக்கின்றோம்

அதிகாலைச்  சூரியனை  எங்கள் உலகின்  விளக்காக்கி
அந்திச் சாயுமுன்னே  இரையைச்  சாய்த்திட  துடிக்கின்றோம்

வென்றுவிட்டால்  ஒருநாள் கழிந்தது எம் வாழ்வில்
இல்லையென்றாலோ எதிரியின் முன் வீழ்வோம் இரையாகி

உணவே பிரதானமானாலும் பிறந்த  இனத்தை  உண்பதில்லை சந்ததியை
உழைக்க மட்டுமே பழக்குகிறோம் எங்களிடம் என்றுமே சோம்பலில்லை

Sunday, February 12, 2017

சுடரே சுடரே சுடாதே

சுடரே சுடரே சுடாதே
சற்றும்  இருள் உனை வெல்ல விடாதே

சுடுவது மட்டுமோ உன் கடமை?  நல்
சூழலை எரிப்பதும்  அந்தோ மடமை

நாணயம் போல் இவ்வுலகில்
நன்மை தீமை இரண்டுமுண்டு

ஒளியை பெருக்கி நீ மகிழ்வாயே
உலகில் உன் பொறுப்பை நன்கு உணர்வாயே

மாசறு மனதில் இணைவாயே
கசடற கற்போன் அறிவில் சேர்வாயே

பெரியோர் வாக்கில் தவழ்வாயே
பொறுமையை  அணிந்தவருடன் இரண்டறக்கலப்பாயே

அன்புக்கு மட்டும் நீ அடி பணிந்துவிடு
அதனை எரித்து தடுப்பதென்பது அறியாமை

ஆணவத்தை  அடையாளம்  கண்டுபிடித்துவிடு
ஆணிவேர் வரை எரித்துவிடு

உழைப்புக்கென்றும் நீ துணைஇருப்பாய் போகட்டும்
வெட்டிப்பேச்சினை மட்டும்  நீ எரித்திடுவாய்

Friday, February 10, 2017

வெண்பா

புள்ளினம் பூவிதழ்ப் பூமகளைக்   கண்டதும்

துள்ளின பந்துபோல் தன்னினம் என்றன

மனதின் களிப்பில் மயங்கி -வியப்பில்

கனவில் மகிழும்  கண்டு!

Thursday, February 9, 2017

தூரதேசம்...


கண்ணை மயக்கும் இயற்கை அழகு
விண்ணை முட்டும் அடுக்கு மாடிகள்

விதிகளை மதிக்கும் வாகன ஓட்டிகள்
செடிகளை போற்றி பராமரிக்கும் மக்கள்

பெருமிதம் பொங்க தூரதேச
தெருவீதியில் நடந்தால் எதிரில்

வயதானோரை கண்டதும் மனதில்
வந்துவிடுகிறது பெற்றோரின் முகம்

மகிழ்ச்சி ஓடி ஒளிந்திட
மீண்டும் வீட்டையடைந்து விழுகிறேன் படுக்கையில் வழக்கம் போல்

வேகமாக வீசும் காற்று மட்டும் தனிமை தீர்க்க மூடிய என்
வாசல் கதவை தட்டும்!

உனக்காக!

உனக்காக!

அகங்காரத்தை அழித்து என் மனதை
அலங்காரமாக்கினேன் உனக்காக!

சுயமதிப்பு மிக்க என் மனதிலும் ஒரு அரியாசனம்   அங்கு
சுயம்புவாக தோன்றிவிட்ட உனக்காக!

உதிர்ந்தபின் திரும்பப்பெறவே  முடியாத மதிப்புமிக்க
வார்த்தைகள் என்றுமே  உனக்காக!

இழந்து விட்டால்  மீட்கவே முடியாத பொக்கிஷமான
என்  வாழ்வின் ஒவ்வொரு நொடியும் என்றுமே உனக்காக!

இடம் மாறும் இதயம்!

இதிகாசங்களும் சிலாகிக்கும்
இதயங்களின் சங்கமம்!

அண்ணலும் நோக்க அவளும் நோக்க
வண்ண வானவில்லாய் மனம் வளையுது!

புனித நிகழ்வது
மனமும் தன்னால் நெகிழுது!

பேதங்கள் மறந்து
உத்வேகங்கள் பிறந்து...

வார்த்தைகள்   பல கோடி
பார்வையிலேயே கலந்துரையாடி...

கட்டிளங்காளை மெல்லிதயம் சுமக்க மாற்றாக மென்மையான
கன்னியோ வலியவனின் இதயத்தை சுமந்தபின் ...

புதியதாய் பிறந்ததுபோல் இருவருக்குள்ளும்
புதிராக ஒரு தோற்றம்!

நீயும் என் தாய்!

மேய்ச்சலுக்கு நீ  போகும் நேரம் மனமும்
பாய்ச்சலில் உன்னை த் தொடர்ந்து ஓடும்! 

கறந்த உன் மடிப்பாலை  குடிப்பதால்  புதியதாய்
பிறந்த உன் கன்றுபோல் நானும் உன் சேய் தான்!

அம்மா எனக் கூவி நீ  கன்றை  அழைக்கையிலே ஏனோ
சும்மா என் மனம்  செவலை கொள்வதால் நீயும் என் தாய்தான்!

Tuesday, February 7, 2017

கைத்தொழில்!

கைத்தொழில் ஒன்று கற்றிடுவோம்
கவலையை  கவலை கொள்ளவைப்போம்!

கொதிக்கும் உலகில் வாழ்வதற்கு
குளிர் மண்பாண்டங்கள் செய்திடுவோம்! 

மானம் காக்கும் ஆடைகளை தோதாக
நாமே செய்வோம் நெசவு நெய்து!

நெகிழி ப் பையை துரத்திடவே
நல் கூ டை முடைய கற்றிடுவோம்!

ஓவியங்கள் வரைந்திடுவோம்
ஓங்கி நம் கற்பனையை உலகிற்கு  உரைத்திடுவோம்!

பாசம்!

அன்பால் இணைந்த பந்தங்களின்
அடிமனதில் குடிஇருக்கும்!

உரிய நேரத்தில் ஓடிவரும்
உரிமையோடு துன்பமதை  பகிர்ந்துகொள்ளும்!

பகிர்ந்த  இன்பம்   மேலும்  பெருகும்
புதிரான  அமுதசுரபி!

பாசவலையது சிக்கியவர்களுக்கு  என்றும்
பாதுகாப்பாய்   உணரும் நிலையது!