Thursday, April 27, 2017

மீண்டும் என் குழந்தை பருவம் வேண்டும்


மட்டைப்பந்து விளையாடிய  அண்ணனை 
கைதட்டி கவாஸ்கர் என்றே முழங்கியதும் 

பூவரச மரத்தின் நிழலில் இலை பறித்து 
பீப்பீ செய்து வாசித்த கச்சேரிக்கு   
தவிலாக வாளியை தட்டிய தம்பியும் என 
தித்திக்கும் நினைவுகள் திரும்ப கிடைத்திடவே 

வேண்டும் ஒரு வரம் எனக்கு 
மீண்டும் என் பருவம் பால்யமாகிடவே!

Wednesday, April 26, 2017

இரண்டுவரி கவிதைகள்


வீரம்

நித்தமும்  பலர் பலியானாலும் வெளியுலகில்
ஆயுதமின்றி பயணிக்கும் பெண்களின் துணிவு!

சிரிப்பு

பல்லாயிரம் உயிரனங்கள் வாழ்ந்தாலும்
மனிதனுக்கு  மட்டுமே கிடைத்த வரம்!

மனம்

மகிழ்ச்சியில்  நூறுகாதம் தாண்டியும்  குதிக்கும்
சோகத்தில் ஆறுதலை  வேண்டியும்  நிற்கும்

அமைதி

மிருக மனம்  அமைதியானால் மனிதனாகும்  நல்
மனித மனம் அமைதியானால் தெய்வமாகும்!


ஆலிலை கண்ணா!


பிரஹலாதன்  சிறுபாலகனென்றாலும் நின்
திருவடி பணிந்துவிட்டதால்

ஓடி நீயும் ஒளிந்துகொண்டாய் அவனை காத்திடவே
தேடி தேடி சிறு துரும்பு முதல் தூண்வரையிலும்!  கோதை

சூடிய மலர்களை வாங்கி
சூடிக்கொண்டு மகிழ்ந்தாய்!

நின்னடியார்களுக்கு என்றும் நீ அடிமையோ  அவர்கள்
சொன்னவண்ணம் செய்யும் திருமாலே?

நின்மேனி பச்சைமாமலையென்றார்
நீரேந்தும்  மேகநிறமென்றார்!

உன்னடியார்களின் பாமாலைகள்
உன் திருவடியின்  மகிமையை  மனதில் பதிக்குதே!

மகிழ்ச்சியில்  பொங்கும் கண்ணீர்
அடுப்பில்  பொங்கும்  பாலை மறைக்குதே!

ஊசலாடும் மனதுடன்
ஊணுடம்பு  வளர்க்கிறேன்!

கடலிலே விழுந்திட்ட சிறு துரும்பானேன்
கடக்கின்றேன் நீ அளித்த வாழ்வதனை!

பேரலைகள்   நீ ஏன் செய்கின்றாய் கண்ணா
சிறு துரும்பிடமுமா உன் குறும்பு?

அலையோசையோடே என் மனம் உன்
குழலோசையை  நாடுதே!

அலையோயும் அச்சிறு கணத்திலே
அழைக்கின்றேன் நான்  உன்னை!

கடமைகளால் என்னை  கட்டிப்போட்டு   இவ்வுலக
உடைமைகளில் என் மனதை நீ திசைதிருப்பினாலும்...

பாம்பணை போல நீ படுத்துறங்க முடியாவிட்டாலும்
ஆலிலை போல் அழகான ஓரிடம்

உனக்காக   என்னுள்ளத்தில் என்றுமே
உள்ளது  கண்ணா!

Tuesday, April 25, 2017

காதல் கள்வன்

நலமாய் நாம்  வாழ
உளமாற நீ நினைக்கின்றாய்!

கவனமுடன் கல்லூரியில் நான் படித்திடவே என்
கண்ணில் பட்டுவிடாது ஒளிந்து ஓடுகின்றாய்!

இலட்சியங்கள் வென்றுவிட்டு பின்
இல்வாழ்க்கை தொடங்கிடவே துடிக்கின்றாய்!

திண்ணமான மனதோடு நீயும் உன்
எண்ணங்களை வெல்கின்றாய்!

பெருமையோடு உனை கொண்டாடிட
பேதை நானும் விழையும் வேளையிலே...

பெரிய கள்வன் நீயென்று உணர்த்துகின்றாய்   நித்தம்
ஏமாற்றி என்னை அணைக்கின்றாய் நள்ளிரவில் வரும் கனவில்!



அம்புப் படுக்கை!


பாலும் தேனும் தினம் விருந்தாக
நானுமுன்னை வேண்டவில்லை!

பஞ்சுமெத்தை தேவையில்லை நடுசாமத்தில்
கொஞ்சும் சிசுவும்  தொல்லையில்லை!

உழைத்து துவண்டிட்ட   உடம்பென்றும் 
பிழைத்து வாழ்ந்திட தேவை நல்லுறக்கம்!

அன்பு வார்த்தைகளுக்கும் உன்னிடம்   பஞ்சமென்றாலும்  
என் மனதை  கடும் சொல்லம்புகள் படுக்கும் மஞ்சமாக்கிடாதே!


Friday, April 21, 2017

நான்கு வரிக்கவிதை

அல்லிமலரும் , சந்திரனும்..
------------------------------------------
வெள்ளை உளத்தாலே
விண்ணை அடைந்தாயே
உண்ண  அழைத்தேனே
அல்லிமலர்   தேனே!

Thursday, April 20, 2017

இருவரி கவிதைகள் - 3



கண்ணீர்

இன்ப துன்பங்கள் மனதில் எல்லைதாண்டிவிட்ட
தருணத்தின் அடையாளம்!

தவிப்பு

சிந்தனைகளின்  வேகத்திற்கு ஈடுகொடுத்து
செயல்பட முடியாத நிலையில் தோன்றுவது!

யாசகம்

கழிவிரக்கம் தன்மேல் ஏற்பட வைத்து
தம் தேவைகளை நிறைவேற்ற முயல்வது!


போராட்டம்

 நிராகரிக்கப்பட்ட தேவைகளை அடைய
 வீரத்துடன் நேரிடையாக முயல்வது.

Tuesday, April 18, 2017

மாயனே,,, தாமோதரா,,,,,

விந்தைகள் செய்ய வந்தாய்  பல
சிந்தைகள்  கவர விழைந்தாய்!

சுற்றிலும் பெரிய மதில் சூழ் அறை உலகையே 
சுட்டுவிடும் ஆதவனுக்கா  சிறை?

சங்கொடு சக்கரமும் மின்ன மாயனே
அங்கொரு பிறப்புதான் என்ன?

கார்மேகமுன்  வண்ணம் கண்டதும்-மயங்கியதோ
கயிலைநாதரின் எண்ணம் அதனால்தான்

ஆலகாலத்தை உண்டு அர்த்தநாரியும்
நீலகண்டனாய் உருமாறி  மகிழ்ந்தனரோ?

பைந்நாகப்பாயில் உன் படுக்கை நன்கு
பள்ளிகொண்டபின்னும் ஏன்  வேடிக்கை?

ஆலிலையிலும்  துயில இன்னுமோர் ஆராய்ச்சி
அல்லல்பட்டிருப்பாள் உன்னால்  யசோதை ஆய்ச்சி

வெண்ணெயுண்ட பாலகன் நீ
மண்ணையுமுண்டு ருசித்தவன்

இளகிய மனதொடு  பிரளயத்தில் காத்திடவே
உலகையே உண்ணும் பெருவாயா

உலகம் உண்ட உன் பெருவாயை
வியந்து  நோக்கிவிட்ட  நல்தாயின்  மனதை

கர்வம் பீடிக்கவிடாமல் எந்த மாய
கயிறுகொண்டு கட்டினயோ  தாமோதரா?

Sunday, April 16, 2017

திராவிட வேதம் தந்த பெருமான்!!

திரவியமான திராவிட வேதம்
திக்கெட்டும் வணங்கி போற்றும்
திவ்ய பிரபந்தமதில் என்றும்
திளைத்திருக்கும் திருமாலே!

செந்தமிழில்   பாசுரங்கள்
செய்துவைத்த ஆழ்வார்கள்
செப்பிய கோயில்களில்
செல்வாக்குடன் உறைகின்றாய்!

நம்மாழ்வார் மனதிலே
நலமாய் அமர்ந்துகொண்டு
நான்குவேதங்களையும்
நற்றமிழில் உரைத்துவிட்டாய்!

குருகூர் நம்பி  மாறன் புகழ்
குறையிலாது வளர்ந்திடவே
கோரிக்கை வைத்தாய்
கவிச்சக்கரவர்த்தி கம்பரிடம்!

பராங்குசன் காரிமாறனை
பாரெங்கும் பரிச்சயமாக்கிடவே
படைத்தார் கம்பர் அந்தாதியும்
பெருமைமிகு சடகோபருக்கு!

மதுரகவியாழ்வார் மகிழ்ந்து
மனமுவந்தருளிய  பாமாலைகள்  தம்
மனம்கவர் குருநாதர்
மாறனுக்கு மட்டுமே!

ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்...