Friday, January 27, 2017

இரக்கமில்லையா...?

ஈடில்லா மனித உயிர் ஏங்குது
ஈகையில்லா இதயங்களால் கண்ணீர் சிந்துது!

கரங்கள் குவித்து வேண்டுது
கழிவிரக்கம் ஏற்படத் தூண்டுது!

ஒருசாண் வயிற்றின் தேவையது
எண்சாண் உடலையும் காக்குமது!

போலியான உலகமோ இது உயிரின் வலி புரியவில்லையா?
காலியான தட்டு நாளையும் பட்டினியெனுதே சிறிதும் இரக்கமில்லையா?

Monday, January 23, 2017

எம்மொழி!


சிவமும் சக்தியும் பெற்ற
தவப்புதல்வன்!

ஆறுமுகம் கொண்டு
அறுபடை வீடும்  கண்டு

சீரிய பெருங்குணங்களும்
வீரமும் ஒருங்கே பெற்ற

தமிழ்க்  கடவுளென
ஒளவையே மொழிந்துவிட்டபின்

தந்தைக்கே  உபதேசித்த பாலகன் காப்பது     
சிந்தை குளிர எம் தாய் எமக்கு  ஊட்டிய

அமுதமொழியையே  என
ஐயமற அறிந்துவிட்ட  கணத்திலே

செருக்கெனக்கும் வாராதோ?

Thursday, January 19, 2017

ஏர்சுமக்கும் காளையே

ஏர்சுமக்கும் காளையே
என்றும் நீ எம் தோழனே!

வீரமும் கற்றோம் உன்னிடமே
விடமாட்டோம் எம் உரிமையை யாரிடமும்

மரபு காக்க கூடுவோம்
மரணம் வரை போராடுவோம்

உழைக்கும் வர்க்கம் ஒன்றுகூடினால்
பிழைக்குமோ எதிர்க்கும் கூட்டம்!

Friday, January 13, 2017

வருக தைமகளே... வழியெல்லாம் பூப்பூக்க!

வருக தைமகளே...
வழியெல்லாம் பூப்பூக்க!

வாழ்வு வளம்பெற்று
வையகம் தழைத்தோங்க!

மண்மாதாவை தன்னுயிராய்
மதித்தொழுகும் விவசாயி உயரவேணும்!

தானியங்கள் விளைவித்து தாய்போல்
தரணியையே வாழவைக்கும்...

பூமித்தாயின் தலைமகனவன் நெஞ்சின்
பாரத்தை போக்கிடம்மா!

மும்மாரி பொழிந்து உழவர்களின்
கண்மாரி துடைத்திடம்மா!

ஏர்பூட்டி உழுபவரின்
ஏக்கத்தை தணித்துவிடு!

தைபிறந்தால் வழிபிறக்கும் உன்
தயவிருந்தால் இது பலிக்கும்!

அறுவடை செய்பவர்கள் காலமெல்லாம்
அறுசுவையும்  சுவைத்திடனும்!

பொங்கலோ பொங்கலென்று
பெருமகிழ்ச்சியில்  பாடிக் கொண்டாடிடனும்!

வருங்கால சந்ததியும் உழவை
வாஞ்சையுடன் கற்றிடனும்!

Tuesday, January 10, 2017

புதுமைப்பெண்கள்!

கற்பனைக்கும் எட்டாத உயரத்தில்
கல்பனா சாவ்லா!

இன்னுயிர் அளித்திட த் தயாராகும்
இராணுவத்திலும் வீரப்பெண்கள்!

அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து
ஆராயத்துடிக்கும் அற்புத பெண்கள்! விதிவிலக்காய்.....

நற்பயிர்களுக்குள் எடுக்க வேண்டிய களைகளாய்
நாகரீக வளர்ச்சியை நல்வழியில் பயன்படுத்தத் தெரியவில்லையென்றால்...
நீங்கள் ஆகமுடியாதென்றுமே  புதுமைப்பெண்களாய்!

Sunday, January 8, 2017

மயங்குகிறேன் மழைக்காதலியே!

மயங்குகிறேன் மழைக்காதலியே!
மீள்வேனோ விடைத்தோணலியே!

கவனத்தை ஈர்க்க நீ ஒரு காணொலியோ?உன்
மனதிற்கேற்றவன் நானில்லையோ?

மழையை நீ அணைப்பது வீணில்லையோ?என
மனதில் பொறாமை மூளுதே அதற்குப் பண்பில்லையோ?

மரம் போலாகிவிட்டேன் படர்ந்திடு கொடி முல்லையே!
மனதைத் திறக்க எனக்கும் வேறு வாய்ப்பில்லையே!

வெள்ளை உள்ளம் கொண்ட பெண் பிள்ளையே!
சள்ளை செய்ய என் மனதில் சிறிதும் வம்பில்லையே!

என்மேல் உனக்கேதும் அன்பில்லையேல்...
நான் வாழ இனி வேறு உலகில்லையே!

எனை மறுத்தாலும் நீ என்றும் மகிழ்ந்திருக்க வேண்டும்!
உன் வாழ்வு நறுமணம் வீசி மலர்ந்திருக்க வேண்டும்!

மறுபிறவியிலும் நான் உன்னை மறவாதிருக்க வேண்டும்!
முடியாதென்றால் நான் மீண்டும் பிறவாதிருக்க வேண்டும்!

Friday, January 6, 2017

ஏனிந்த நாணம்?


ஏனிந்த நாணம்?

கடந்துவரும் பாதைகள்
கடினமாக இருந்தாலும்..

நம்பிக்கை கொண்ட
நல்நங்கையர் தம் வலிகளை மறைத்து..

புன்னகையோடு புவியையே வெல்வதை தானும்
பழக எண்ணி முட்செடியிலும் முகமலரும் ரோஜாவே..

தன்மீது  தீராக்காதல் கொண்ட தலைவன் முன் வெட்கத்துடன்
தலைகுனிந்துவிடும் பெண்மைபோல் உனக்கும் ஏனிந்த நாணம்?

Sunday, January 1, 2017

புத்தாண்டு!



விருந்தோம்பலில் உலகின் சிறப்பு மிக்க
விருதுகளைப்  பெற தகுதி கொண்ட தமிழர்கள் நாங்கள்!

ஆங்கில புத்தாண்டே ஒருபோதும்
அந்நியமாய் உன்னை எண்ணமாட்டோம்!

மார்கழி குளிரிலும்
மாக்கோலமிட்டு அதில்

அழகிய வண்ணப்பொடிகள்  தூவி, வாழ்த்துக்கள் எழுதி
அன்பாய் உன்னை வரவேற்கிறோம்!

மக்களனைவரும்
மனமகிழ்கிறோம் ஒரே நேரத்தில்!

உலகமே இணைகின்றது இன்று புது
உற்சாக சிந்தனையால்!

புதிய உலகத்தில் பிறந்தது போல்
புதிரான அனுபவத்துள்ளல் மனதில்!

எல்லோரும் நேர்மறையான
எண்ணங்கள் கொண்டு ஒரு மனதாய் வேண்டுகிறோம்!

நல்லவை நடக்க வேண்டும்!
நல்லெண்ணங்கள் பலித்திடல்  வேண்டும்!

ஒற்றுமை ஓங்கிடல் வேண்டும்!
உலகில் மனிதநேயம் பெருகிடல் வேண்டும்!