Friday, December 30, 2016

தாய்மை

தாய்மையென்பது சேயுயிர்காக்க
தன்னுயிர் பணயம் வைக்கும் துணிவு!

தரணியிலே ஈடுண்டோ?
தன்னிகரில்லாத படைப்பு!

பொற்பாதங்கள் பணிந்து
சொற்பதங்களால் போற்றவிழைந்தால்...

கடலில் சிறுதுளியானதே முயற்சியும் தாயே
கண்ணீர் மட்டுமே மிச்சம் என்னிடம் உன் புகழ் உரைக்க!

Wednesday, December 28, 2016

ஏன் இந்த வேதனை?

சோதனைகள் தாண்டினால்தான்
சாதனைகள் பெருகுமே!

பட்டை தீட்டிய வைரம் மட்டுமே
பாரில் நன்மதிப்பு பெறுமே!

செதுக்கிய கற்கள் அழகு
சிலைகளாக மாறுமே!

ஒடுங்கி நின்றுவிட்டால்
ஊருலகம் பழிக்குமே!

எதிர் நீச்சல் போட்டுப்பழகிய பெண்ணே பின்
ஏன் இந்த வேதனை?

Tuesday, December 20, 2016

தோழமை!!


ஒரே தட்டில் சோறுண்டுவிட்டு
ஓரினமாகிவிடும் பண்பினாலும்...

பிறந்த தாய்மடி வேறானாலும்
சிறந்த வழித்துணையாகிவிடும் அன்பினாலும்...

குற்றம் குறைகளை சகிப்பதில்
சுற்றத்தையே விஞ்சத்  துடிக்கும் அரவணைப்பினாலும்...

தொய்வில்லா புகழ்தான் என்றும் தோழமைக்கும்
தெய்வப்புலவரவரே  போற்றிவிட்ட நல் நட்பென்பதனால்!

அஞ்சல் பெட்டி!

நித்தம் பல திசைகளிலிருந்து வரும்
முத்தங்கள் கலந்த
சந்தங்கள் சுமந்து புது
பந்தங்களை உருவாக்குவாய்!

பெற்றோரின் மன உணர்வுகளையும்
உற்றார் தம் கருத்துக்களையும்
பாகுபாடின்றி கலந்து உறவில்
ஈடுபாட்டினை வளர்ப்பாய்!

அழைப்பிதழ்கள் பெற்று
பிழையதனை மறந்து மீண்டும்
உறவுகள் இணைந்து
பிரிவுகள் மறைய உதவுவாய்!


அலுவலகத்தின் செய்திகளையும்
பயிலகத்தின் ஆணைகளுடன்
மறுப்பின்றிக் காத்து
பொறுப்புக்களை உரைத்திடுவாய்!

அறிவியல் ஆகாயத்தில் பறந்தாலும் உன்னால் மட்டுமே
அறிந்தோம் அன்பின் ஆழத்தை
மைவிழியாளின் கண்ணீராலான எழுத்துக்களிலும்
கை நடுங்கிய பாட்டியின் கடிதமதனிலும்!

வாழ்த்து அட்டைகள் பள்ளித்தோழிகளுக்கு
வழங்கிய வரலாற்றை
மீண்டும் நினைவுபடுத்திவிட்டாய் மனமும் அடம்பிடிக்கிறது
மீண்டுவர விரும்பாமல்!

Friday, December 16, 2016

செய்திகள்!


ஒவ்வொரு நொடியும் ஏந்துகின்றது உலகின்
ஓராயிரம் புதிய செய்திகளை!

தூக்கத்தினால் தொலைத்துவிட்ட பொன்னான நேரத்தை
ஏக்கத்தினால் எழுந்ததுமே ஈடுகட்ட..

சேதி சொல்ல ஒரு தோழியாய்
செயற்கைக்கோள் வந்தாலும்...

காலைக்கடன் முடிக்கும் வேளையிலும்
காகிதத்திலும் மலர்ந்திருக்கும்...

புதுச்செய்திகளையும் பாலகனும் படித்திடுவான்
புதிய உலகத்தை அறிந்துகொள்ளும் துடிப்பிருந்தால்!