Sunday, November 27, 2016

பிச்சைக்காரி!!

அழுக்கேறிய கிழிந்த ஆடைகளுடன்
ஆதரவு தேடி...

வயிற்று பசியுடன்
வாதம் செய்ய முடியாமல்...

பத்தும் பறந்து போக
பரிதாபம் வேண்டி கோயில் வாசலில்...

கரங்களை குவித்தும்
கழிவிரக்கம் ஏற்பட கெஞ்சியும்...

போராடும் வாழ்க்கை எனக்கு
பழகியிருந்தது பல வருடங்களாகவே...

ஆனால் ...

கைகளில் பையுடன் ஒரு விதவை
கிழவியும் இன்று போட்டியாக...

அமர்ந்துவிட்டாள் புதிதாக
அருகில் பிச்சையெடுக்க!!

ஆச்சர்யமளித்தது அவளின்
அழுக்கில்லா ஆடைகளைக்கண்டு!!

"பிச்சைக்கு புதுசா??!!"
புரியாமல் கிண்டலாய் நான் வினவ பதிலுக்கு...

நாற்பது வருடங்களுக்கு முன் இதே கோயில் வாசலில்
நாற்பத்தெட்டு நாட்கள் மலடி பட்டம் நீங்க

பிள்ளைவரம் வேண்டி
பிச்சை எடுத்த அனுபவமிருக்கிறதென்றாள்...

பொட்டிலறைந்தாற்போல்!!

எல்லை மீறிய எதிர்பார்ப்புகள்!!

நிறைவேறாத ஆசைகள்
நிறைந்திருந்த இள வயதில்...

திறமைகள் இருந்தும் வாய்ப்புகள் இன்றி
திணறிய வாழ்க்கையில்..

எதிர்பார்ப்புகள் என்னுள்
ஏற்படுத்திய  இலக்குகள்...

வைராக்கியம் கொடுக்க
வித்தைகள் பல பயின்று....

வாழ்வின் புது அத்தியாயங்களை
வசந்தமாய் மாற்றி...

சொகுசுகாரில் தினம் கல்லூரி
செல்லும் என் வாரிசுகளால்...

எட்டிவிட்ட இலக்கை
எண்ணி பூரிப்படைந்துகொண்டிருக்கும் வேளையிலே...

ஏணிகளாய் என்னை உயர்த்திகொண்டிருந்துவிட்டு
எட்டவே இயலாத இலக்குகளாய்  இன்று  உருமாறி

நிதர்சனத்தின் முன் இன்று
நிராயுதமாய் நிற்க வைக்கின்றது...

என்னால் நிராகரிக்கப்படுகின்ற....
என் வாரிசுகளுடைய
எல்லை மீறிய  எதிர்பார்ப்புகள்!!

Wednesday, November 23, 2016

எங்கிருந்து கற்றாயோ??


ரோஜாவின் வாசம் மனதை
ரம்யமாக ஈர்க்கும்!!

வண்ணங்கள் தீட்டிய இறைவனை எண்ணி
வியக்க வைக்கும் மலர்!!

அன்பை வெளிப்படுத்த
அழகு ரோஜா ஒன்றே போதும்!!

மலர்த்தோட்டத்தையே தன்
மணத்தால் நிரப்பும் வாசமலர்!!

ரோஜாவே....

முட்செடியில்  நீ வசித்தாலும்
முகம் மலர்ந்து  வாசம் வீசுகிறாய்...

உயரிய இப்பண்பை
எங்கிருந்து நீ கற்றாயோ??

ஒருவேளை...

மண்ணில் பிறக்கும்போதே
முகச்சுளிப்புக்களை மட்டுமே
முதல் பரிசுகளாய் பெற்றாலும்!!

கடந்து வரும் பாதைகள்
கடினமாயிருந்தாலும்...

நம்பிக்கையொளியை உலகிற்கு தர
நல்நங்கையர் தம் வலிகளை மறைத்து...

புன்னகையோடு
புவியையே வெல்வார்களே அவர்களிடமிருந்தா??

Saturday, November 19, 2016

நான் இன்று அவனானேன்!!

தலைமை அதிகாரியான என்  மகன்
திடுதிப்பென்று வந்தான் தாயகத்திற்கு.
தில்லானா ஆடியது என் நெஞ்சம் சந்தோஷத்தில்!!

தாய் பரிமாறிய உணவுகளை
தன்னிறைவோடு ரசித்து உண்டு...

பார்வையில் ஈரத்துடனும் அளவுகடந்த
பாசத்துடனும் 'அப்பா நலமா ?' என்றான்
படுத்திருந்த  என் தலையை கோதியவாரே !!

புயலென நகர்ந்துவிட்டான் அலுவலக அழைப்பினால்
புரியாமல் விழித்து நின்றேன் !!

பல வருடம் பின்னே
பயணித்தது மனமும்..

அவன் 'அப்பா' என்று எனக்காக அழுததும்
அலுவல் நிமித்தம் அலைச்சலால்

புன்னகையுடன் அவனை முத்தமிட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு
பரபரப்பாக நான் பிரிந்து சென்றதும்...

மகனுக்கு வாழ்க்கையில் முன்னேற
முன்னுதாரணம் கொடுக்க நினைத்ததும்...

இன்று என்னால் நன்றாக
உணர முடிகிறது...

உழைப்பின் மேல் நான் என் மகனுக்கு
உருவாக்கியிருந்த ஈடில்லா நாட்டத்தையும்...  கூடவே

பிரிவு பொறுக்க முடியாமல்
பாசத்தில் அவன் சிந்தியிருந்த  கண்ணீரின் வலியையும்...

Thursday, November 3, 2016

ஏனிந்த தாமதம்??

அதிகாலை பொழுது
என்றும் போல் புலர்ந்தது!

குளுகுளு அறையின்
குளிர்ச்சி தூங்கேன் என்றது ஏக்கத்தோடு!

மூடிய சன்னல்களையும்
மீறி வந்தது பறவைகளின் பள்ளியெழுச்சி!

உதடுகளில் புன்னகை
ஓடி வந்து ஒட்டிக்கொள்ள...

தூக்கியெறிந்தேன் போர்வையுடன்
தூக்கத்தையும் சேர்த்து!

ஆனால்.,..

உழைத்து தேய்ந்த கால்கள்
ஊன்றமுடியாமல் வலித்தன!

தாயின் கருவறையில் உதைக்க ஆரம்பித்து
தள்ளாடும் வயது  வரை உழைப்பதாலோ??!!

பாதத்தில் துவங்கி முட்டி வரை
போக்குக்காட்டிய வலியை...

பொறுமையாக குறைத்தேன்
பயிற்சிகள் பல செய்து!

தவறி விழுந்த வலியால் பிள்ளை பருவத்தில்
தத்தாமல் நடக்க கற்றேன்!

ஆசிரியரின் பிரம்படி வலிக்கு
அஞ்சியதால் பட்டம் பெற்றேன்!

தண்டனைகளின்  வலிக்கு பயந்து
தவறுகளை களைந்தேன்!

வலிகள்தான் வருமுன் காத்து
வழிகாட்டும் நல் நண்பனென்றல்லவா நினைத்திருந்தேன்??!!

வேகமான வாழ்க்கை சூழலில்
வெற்றி பெற நேரம் காலம் பாராமல் ஓடியதால்...

அலட்சியமாக இழந்து விட்ட
ஈடில்லா உடல் நலத்தை...

இம்முறை இவ்வலியும் மிக தாமதமாக
இடித்துரைப்பதேனோ??!!