Monday, October 23, 2017

மீண்டு(ம்) வருமா?

 
தோட்டத்தில் புதைக்க /
ஆட்டமாடி விழுந்திட்ட/

பால் பல்லை/ 
வான் அறியாது/

மறைத்த நொடிகள் /
மீண்டு(ம்) வருமா????



Wednesday, July 26, 2017

எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

புத்திரபாக்கியம் பெற்றிடவே
புத்திரகாமேஷ்டியாகம் செய்த பெற்றோருக்கு
புத்திரனாய் வந்துதித்த நீ காடேகு என்னும் சொல்லை
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

இன்னல்கள் மிகுந்த காட்டில் உறையும் போதும்
மான் வேண்டுமென்ற மனைவியின் ஆவலை
காதல் வரமென்றே மனதில்
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

பத்தினியவளை பாவியவன் கடத்திவிட்டான்
பாதணிகளின்றி  முட்கள் நிறைந்த காட்டில் துணையை  தேடி திரிகையிலும்
தினவெடுத்த தோள்களில் வில்லை  சுமையாக  எண்ணாமல்
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

கடமைகளை ஆற்றிட சொல்லொணா  துயருடன் கடலை கடக்கையிலே
நின்னையும் இளவலையும் இலகுவாக சுமக்கும் அனுமனின்
ஈடில்லா பக்தியதன் சக்தியை
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

மாற்றான் மணை நோக்கியவனின் நீங்காத ஆசைகளை
அம்புகளால் துளைத்து களைந்த நீ
அவன் இலவளின் தூய பக்தியை  ஏற்று
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

கல்லான அகலிகைக்கு சாபமதை நீக்கி பின் நின் மனைவியின்
கற்பை  உலகிற்கு உணர்த்திட தீக்குளி எனும் வேளையிலே
கல்லாய்  கனத்த  உன் நெஞ்சின் பாரத்தை
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

பெண்களுக்கு பெருமதிப்பை பெற்று தந்த
பெண்தெய்வத்துடன்  அரியாசனத்தில் அமர்கயிலே
போற்றி வணங்கிய உயிர்களின் அன்பை
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

Thursday, July 20, 2017

போராட்டமே வாழ்க்கை

முட்டையிலிருக்கும் கோழிக்குஞ்சு
முட்டி மோதினால் மட்டுமே வெளியுலக வாழ்வு பெறும்

கூட்டிலுறங்கும் புழுகூட வண்ணத்து பூச்சியாகிட
கட்டிப்போட்ட தளைகளை தகர்க்கும்

தெய்வச்சிலைகளின் கருணைபொங்கும் கண்கள்
செதுக்கிய உளியின் வலியை உணரும்

தேரோட்டத்தில் திசைமாற்றவே முட்டுக்கட்டை தேவை
போராட்டமே என்றும்  முன்னேற்றும் வாழ்வை

Wednesday, June 14, 2017

சீதையின் சுயம்வரம்

கட்டுத்தறியையும் கவிசொல்ல வைக்கும்
கவிச்சக்ரவர்த்தியின் மனம்கவர் கதாநாயகனவன்!

தந்தைசொல் மிக்க மந்திரமில்லை  என உலகத்தோர்
சிந்தையில் செதுக்கிய   தவப்புதல்வன்!

பெண்மையை போற்றுகின்ற
பேராண்மை படைத்தவன்!

கற்புநிலையை பொதுவில் வைத்து
ஒருவனுக்கு ஒருத்தியென்றான்!

பத்துதலை இராவணனை நிராயுதபாணியாக்கி
பித்துக்கொள்ள வைத்திட்டான்  மாறாக

இரக்கமில்லா  தாடகையை  பெண்ணென்பதால்  மனதில்
கலக்கம்  மிகக் கொண்டே வதைத்திட்டான்!

அகலா பெருந்துயருடன்  கல்லாகியிருந்த
அகலிகையின் சாபத்தை போக்கியவன்!

சுயம்வரத்தில்  வில்முறித்து தன் வீரத்தை
நயம்பட உரைத்து நின்றான்!

கன்னியவள் நெஞ்சினிலே
எண்ணியபடி இடம்பிடித்தான்!

தாரைவார்க்கு முன்  அறிமுகமான   அயோத்தி இராமன் 
தாரத்திற்கு    உணர வைத்தான்  இராமனிருக்கும்   இடமே அயோத்தியென!

Saturday, May 6, 2017

தேநீர் விருந்து

இளங்காலை பொழுதென்றால் 
இளங்காளை எழுகின்றேன் 
இன்முகத்து அருந்தாயின் 
உபசாரம் மனமீதில்!


Wednesday, May 3, 2017

பரிதவித்தாய்


பசித்த சிசுவின் 
தவிப்பு அறிந்தாள் 
உடைத்த  கல்லும் 
கூறிற்று வலியை 

Tuesday, May 2, 2017

கண்ணே கண்மணியே....

அறியாமையை  அணிந்துகொண்டு
என் வயிற்றில் வந்துதித்த  அற்புதமே!

மழலை மொழி கேட்டு  மகிழ்கின்றேன்
தாயெனும் தகுதிக்கு உயர்கின்றேன்!

ஏழைத்தாய் என்னையும்  முத்தமிட்டு
இறுமாப்புக்கொள்ள வைக்கின்றாய்!

இமயத்தை கூட தலையில் சுமந்திடுவேன் 
இன்னலின்றே நீ வளர்ந்திடவே!