Wednesday, October 26, 2016

வள்ளல் பிறந்தான்!!


புன்னகை பூக்கும் பிள்ளைச்செல்வமே...
பல்லில்லா ஈறுகள் தெரிய...

சின்னஞ்சிறு சிவந்த நாக்கு
சிரிப்பில் மேலண்ணத்தில் ஒட்ட...

கண்களை அகல விரித்து
காட்டிக்கொடுக்கிறாய் உன் கள்ளமனதை!!

மயிலிறகால் தீண்டுவதுபோல்
மயக்க வைக்கும் ஒரு பார்வை!!

மெத்தென்ற பூப்பாதங்கள்
மெல்ல தத்தி நடந்து வர...

பஞ்சு போன்ற கன்னங்களில் என் உதடுகளை
பதிக்க சொல்லி தூண்டில் போட்டு....

பூப்போல அள்ளி உன்னை
பாசத்துடன் கொஞ்ச வைத்து...

கோடி இன்பம் தருகிறாய் வள்ளல்போல்
ஈடேதும் கேட்காமலேயே!

தந்தையென்னை முத்தமிட்டு
திக்குமுக்காடவைக்கிறாய்!!

ஆனந்தம் பொங்கும் மனத்துடன்
அன்பை அனைவருக்கும் பரப்புகின்றாய்!!

பாகுபாடின்றி இவ்வுலகில்
பழகி களித்தாடிடவே...

அறியாமையை அமிழ்தம் போல்
அருந்திவிட்டு வந்தாயோ??!!

தாயே பென்சைதென்!!


கடல் தாண்டி வந்தும்
கைபிடித்து என்னை காத்தாய் !!

ஊர் மாறினாலும் உணர வைத்தாய்
உன் பெயர் பென்சைதென் என்று!!

 என்...

தூக்கத்திலும் இன்பமாய் நீ
தரவிழையும் தெய்வதரிசனம்...

உன் மீது நான் கொண்ட
உண்மையான பக்தியாலோ??!!

ஏனோ நிஜத்தில் கண்கள் கலங்கி
உன்னை காண மனம் ஏங்குதே!!

எழுத்தில் வடிக்க உன்
எழில் உருவம் தோன்றுமோ??!!


இதயத்தில் உன்னை வைத்தேன்
இனி எவருக்கும் இல்லை இடம்  என்று!! நின்

அழகு பாதங்கள் விட்டு
அகல கூடாதென இதயம் துடித்தாலும்!!


அடம்பிடிக்கும் என்விதியோ
இடமாற்றம் செய்கிறது என்னை!!

தாய்ப்பசுவை இழந்துவிட்ட கன்று போல்
தங்ககூண்டிலுள்ள கிளியானேன்!!


மயக்கும் அழகில் மாதங்கி தாயாய்
மீண்டும் உன்னை கண்டேன்!

உற்சாகத்துடன் உன்னை காண ஓடினேன்
ஒரு பிடி சோற்றை கண்டுவிட்ட வறியவன் போல்!!

குளிர்ந்தது அகமும் கண்டுவிட்டேன்
கண்போல என்னை காப்பவளை!!

பிறவிப்பயன் பெற்றுவிட்டேன்
பிறகென்ன எனக்கினி விதியோடு ஒரு பேச்சு!!

Tuesday, October 25, 2016

கண்களே கண்களே!!

சிவந்த கண்கள்
சிறப்பாய் உரைக்கும்
உள்மனதின்
உஷ்ணத்தை!

திசை தெரியாமல் அலைந்து
திரியும் கண்மணிகள்
குழம்பும் சிந்தையை
கண்ணாடி போல் காட்டுமே!

குதூகலமான மனதை
குளிர்ந்த பார்வைகள்
உணர்த்துமே குறையின்றி
உலகிற்கு!

கலங்கிய கண்கள்
வெளிப்படுத்துமே
இதயத்தின்
எழுச்சியான உணர்ச்சிகளை!

தீர்க்கமான பார்வைகள்
தீர்மானித்த முடிவுகளை
திண்ணமாக உரைக்குமே
தடையின்றி!

பார்வையிலேயே
படித்துவிடலாம் உலகின்
பொக்கிஷங்களை
புறக்கண்களால்!

உள்நோக்கி திருப்பினால்
அறியலாம் தன் பிறப்பின்
அர்த்தங்களை
அகக்கண்களினால்!

ஐம்புலன்களிலேயே
அதிசயமாக
கண்களுக்கு மட்டும்
எத்தனை பக்கங்கள்!!

Friday, October 21, 2016

கிரி வலம் வந்தேன்!!


இரண்டாவது தலைமுறை நான்
எடுத்த பின் எழுந்த 

அடங்க வொண்ணா 
ஆவலாய் தந்தை வாய் திறந்தார்...

கடல் தாண்டி வந்தாலும்
கடந்த காலம் கண்களை கலக்குதென்றார்...

எங்களுக்காக உழைத்து தேய்ந்த அப்பாவின் 
ஏக்கத்தை ஆணையாக ஏற்றேன்...

தான் பெற்ற வெற்றிக்கு வித்து 
தாயகத்தில் உள்ளதென்றார் குல தெய்வமாக ஒரு மலையில்...

பறந்தோம்... தெய்வ தரிசனம் பெறவும்... 
பெற்றோரை மகிழ்விக்கவும்....

தங்குமிடம் தரமிருக்குமோ? நல்ல 
தண்ணீர் பருக கிடைக்குமோ? என்ற குழப்பங்களுடன்...

ஆனால்... என்ன ஆச்சர்யம்??

நாற்பது வருடங்களில் 
நகரமாய் மாறியிருந்தது சிற்றூர்...

விலையுயர்ந்த கற்களால் பதிக்கப்பட்டு 
விண்ணுலகம் போன்ற தங்குமிடம்...

தங்கும் அறையில் கூட
தெய்வீகம் கமழ்ந்தது!

பக்தி பரவசமாய் பிரமிப்போடு 
பல முறை சுற்றிவந்தேன் தங்குமிடத்தை...

கிரி வலம் செய்து 
குலதெய்வ வழிபாடு நடத்த 
குதூகலமாய் கிளம்பினால்...

அட அதிசயமே!!
எங்கு தேடியும் இல்லை மலை...

மனது ஆறாமல் 
மற்றவரிடம் விசாரித்ததில் புரிந்தது 

மலைக்க வைக்கும் மாற்றத்தை  சிற்றூருக்கு 
மலை தான் தன்னை தாரை வார்த்து தந்தது என்று...

Thursday, October 20, 2016

சக்தியா? சிவமா?

பட்டிமன்ற தலைப்பல்ல!
பாட்டி சொன்ன கருத்தல்ல!

விளையாட்டில் வெற்றி!
விண்ணைத் தொடுவதிலும் வெற்றி!

பெண்மை சாதிக்க துடிக்குது!
உண்மை உணர்த்த பார்க்குது!

ஆளும் திறனை வளர்க்குது!
ஆகாயத்தை வளைக்க நினைக்குது!

ஆணென்ன சளைத்ததா?
ஆண்மை விட்டுக் கொடுக்குமா?

ஆணும் ஜெயிக்கிறான்!
ஆளப் பிரயத்தனப் படுகிறான்!

சக்தியா? சிவமா?

ஆற்றல் மிக்க ஆண் பாயும் உயரம் மிக அதிகம்
ஆயிரம் பதக்கங்கள் பெறுவான்!

ஆனால் பாய வைத்தது பெண்மை தானே??

பெண் ஆணின் எதிரி அல்ல
பெண் ஆணுக்கு முன்னோடி!!

பெண்ணே நீ வெல்க! ஆணுக்காக...

உலகின் பார்வையை மாற்று பெண்ணே
உன்னால் மட்டுமே முடியும்!!

Thursday, October 13, 2016

வாசம்... இலவசம்!!

பாதையில் பயணிப்போரை
பரவசப்படுத்தி தன் வசப்படுத்துகிறது
மலர்களின்  வாசம்!

உரிமையாய் தென்றலும் வாசத்தை வாரிப்பூசி
உரைத்தது தான் பூங்காற்றென்று!

வண்டுகள் ரீங்காரம் செய்து உறுதிபடுத்தின
வளமான தன் வாழ்க்கையை!

வாசத்தை விலைபேசி
வாங்கிவிட விரும்பினர் பலர்!

தோட்டமிட்டவனின் திறமைகளை
நோட்டமிட்டனர் மனதில் வியந்தவாறே!

ஆளுக்கொரு செடி வாங்க எண்ணி
அனைத்து மலர்களுமே அழகாய்  தோன்றி...

ஆசையை பெருக்கிட அலைந்தனர்
அங்குமிங்கும் குழப்பத்தோடு!

ஓரிரு செடிகள் வாங்கி
ஒய்யாரமாக சென்றனர் ஏக்கத்தை மறைத்து!

தோட்ட சொந்தக்காரனுக்கு கூட
தொலைவில் தான் மச்சுவீடு!

ஆனால்....

பணத்திற்க்காகத்தான் என்றாலும் நீரூற்றி
பராமரிப்பவனுக்கு மட்டுமே...

தோட்டப்பூக்களின் மொத்தவாசமும் என்றும்  இலவசம்!!

Wednesday, October 12, 2016

ஆயுதம் செய்தோம்...


சுள்ளென்று சூரியன் சுட்டு விட்டதால்
சிவந்து விட்ட வானம்
நிலவு வந்து நின்றதும்
நீலமானது மீண்டும் குளிர்ந்து!

தணிந்த வானத்தை
தாலாட்ட வந்தன
குளிர் மேகங்கள்
கூட்டம் கூட்டமாக!

சத்தமில்லா பகுதியாக்க
சாத்தியமே இல்லாமல்
விண்ணை கிழிப்பது போல்
விமானங்கள் வந்தன விரைவாக!

வெகுண்டெழுந்த மேகங்கள்
வெண்திரையிட்டு பாதையை மறைக்க
அலட்சியமாக கிழிக்கப்பட்டு
அறிவியலுக்கு பலியாகின!

நிலவும் பயந்து நின்றது
நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வருகைக்கு பிறகு!

காற்றும் கூட கலங்கியிருந்தது
காடுகளுக்கு நேர்ந்த கதியால்!

கடலும் கதறியது
பனி உருகிய பாரம் தாங்காமல்!

மிதமிஞ்சிய அறிவால்
மட்டில்லாமல் மகிழ்ந்தாலும்
பக்கவிளைவுகள் நமக்கு
புரியவைக்க போராடுவதை பார்த்தால்...

ஒரு வேளை நாம்....

நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு
அடிக்கிளையை அறுக்கிறோமோ??!!

அறிவியல் என்னும் ஆயுதத்தால்!!