Tuesday, March 7, 2017

குழப்பம்!

அளவில்லாத வெள்ளம் பாயும் நதி!
அதிலோடும் ஓடம் அந்தோகதி!

எண்ணங்கள் மனதில் சங்கமித்தால்
திண்ணமான முடிவுகள் முடங்கிடுமே!

பிறர்கூறும் புறங்கூறல்கள்  அதனை
புறக்கணித்து விடு பெண்ணே!

நம்பிக்கை எனும் திசைநோக்கி
வாழ்க்கை படகை செலுத்த  குழம்பியோடிடும்  குழப்பமும்!

சிறை!

சிறையில் சிக்கிவிட்ட
சிறுத்தையோ இவன்?

அன்னையின் அன்புச்சிறையோ அல்லது மனதை
ஆள்பவளின் காதல் சிறையோ?

தினவெடுத்த
தோள்வலிமை கொண்டவனோ?

உடைத்தெறிய உள்ளமின்றி
உரமேறிய தன்  கரங்களுக்குள்ளே

சிறைக்கம்பிகளை
சிறை  வைத்தவனோ?  மாறாக

சிறைக்கம்பிகளுக்கு 
கறை படிந்த கரங்களுடன் 
உரையாடுவதும் பிடித்த வாடிக்கைதான்

தவறிழைத்திருந்தால் தப்பாமல்
பிழையதனை  நீக்கி வீண் 
பழிதனை களைந்து 
வெளி வந்திடு நீ 
விடுதலையாகி!!

சிசுவே...

தாய்ப்பால் குடிக்கும் முன்
புட்டிப்பால் புகழறிந்து!

தாலாட்டு கேட்கும் முன்
குறுவட்டு கவி கேட்டு!

பாட்டி வைத்தியம் மறைந்து
ஆண்டிபயாடிக் துணை நிற்க!

அத்தை எனுமுன்
அதனுறவு அறவே இன்றி!

மாமனை காண
மறுஜென்மம் வாய்க்குமென நம்பி!

பிஞ்சுக்கரம் தொடும்
நஞ்சுக்கொண்ட மானிடனை சேர்ந்து
வலையில் சிக்கி
வகையறியாது  உழலும்...

சிசுவே... இனி
சிறந்த இடம் எதுவோ
சிறப்பாக நீ வளர?


Monday, February 20, 2017

வறுமையின் நிறம்!

வளமையில் வானவில்லின் வண்ணங்கள்
வகுத்தெடுக்கும் அளவுகோலாய் அவரவர் எண்ணங்கள்!

வேடங்கள் பூணுவது வேடிக்கை!
ஏற்றத்தாழ்வது  போற்றுவதும் இங்கே வாடிக்கை!

வறுமையின் நிறம் என்றுமே நிரந்தரம்!
வாழ்வில் உணரவைக்கும் உலகின் தராதரம்! 

பகுத்துண்டு வாழும் பண்பு!
பசியிலும் உண்டிங்கு அன்பு!

Monday, February 13, 2017

பூவே உனைக்கண்டு

பூவே உனைக்கண்டு நான்
பிரம்மித்து  நிற்கின்றேன்!

வானின் மேகங்கள்
வள்ளல்போல்  வந்து

மாரியதை பொழிந்திடவே
மண்ணும் குளிர்ந்து மணம் வீசியதே

சிறுவிதையும் துளிர்விட்டு
செடியாய் வளர்ந்து நின்றதே

கால்நடைகளின் பசிப்பிணியிலிருந்து தப்பிப்  பின்னும்
கால்மிதிபட்டு  அழிந்துவிடாமலும்  பிழைத்து

மொட்டேந்தி பிறகின்று நீயும்
மலர்ந்திட்டாய்

மகரந்த சேர்க்கைக்கு துணை செய்ய நீயே
மணம் வீசி அழைப்பிதழும் அனுப்பிட்டாய்

வண்ணத்துப்பூச்சியின் வருகைகண்ட  மகிழ்ச்சியில்  -நீ
வந்த பாதையின் கடினங்கள் மறந்தனயோ?

சேர்த்துவைத்த தேனையெல்லாம் மொத்தமாய்
சொரிந்துவிட்டாயே!

நில் கவனி கொல்!

உணவுக்காக அலைகின்றோம் உயிரைக்காக்க விழைகின்றோம்
வயிற்றுப் பசியை  துரத்திடவே   கடலும்  மலையும்  கடக்கின்றோம்

அதிகாலைச்  சூரியனை  எங்கள் உலகின்  விளக்காக்கி
அந்திச் சாயுமுன்னே  இரையைச்  சாய்த்திட  துடிக்கின்றோம்

வென்றுவிட்டால்  ஒருநாள் கழிந்தது எம் வாழ்வில்
இல்லையென்றாலோ எதிரியின் முன் வீழ்வோம் இரையாகி

உணவே பிரதானமானாலும் பிறந்த  இனத்தை  உண்பதில்லை சந்ததியை
உழைக்க மட்டுமே பழக்குகிறோம் எங்களிடம் என்றுமே சோம்பலில்லை

Sunday, February 12, 2017

சுடரே சுடரே சுடாதே

சுடரே சுடரே சுடாதே
சற்றும்  இருள் உனை வெல்ல விடாதே

சுடுவது மட்டுமோ உன் கடமை?  நல்
சூழலை எரிப்பதும்  அந்தோ மடமை

நாணயம் போல் இவ்வுலகில்
நன்மை தீமை இரண்டுமுண்டு

ஒளியை பெருக்கி நீ மகிழ்வாயே
உலகில் உன் பொறுப்பை நன்கு உணர்வாயே

மாசறு மனதில் இணைவாயே
கசடற கற்போன் அறிவில் சேர்வாயே

பெரியோர் வாக்கில் தவழ்வாயே
பொறுமையை  அணிந்தவருடன் இரண்டறக்கலப்பாயே

அன்புக்கு மட்டும் நீ அடி பணிந்துவிடு
அதனை எரித்து தடுப்பதென்பது அறியாமை

ஆணவத்தை  அடையாளம்  கண்டுபிடித்துவிடு
ஆணிவேர் வரை எரித்துவிடு

உழைப்புக்கென்றும் நீ துணைஇருப்பாய் போகட்டும்
வெட்டிப்பேச்சினை மட்டும்  நீ எரித்திடுவாய்